போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்கள் தமிழகத்தை வழித்தடமாக பயன்படுத்தும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
போதைப் பொருட்களை கடல் வழியாக கொண்டு வந்து, மக்களை தவறாக வழி நடத்த, அந்நிய சக்திகள் முயற்சிப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கேரளா, தமிழகம் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. போதை மருந்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை சீரழிக்க வேண்டும் என்பதே போதை மாஃபியாக்களின் குறிக்கோளாக இருக்கிறது. இளைஞர் சக்தியை பலவீனப்படுத்தி இந்தியாவின் எதிர்காலத்தை ஆட்டம்காணச் செய்வதே மாஃபியாக்களின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தூத்துக்குடி அருகே உள்ள, சர்வதேச எல்லைப் பகுதியில், இலங்கை கப்பலை, இந்திய கடலோர காவல் படையினர் சோதனை செய்தனர். அப்போது, 100 கிலோ ஹெராயின், 20 கிலோ மெட்டாமார்பின், 5 கைத் துப்பாக்கிகள் என 300 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், சர்வதேச கடல் பகுதியில் கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்த இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு சற்றேறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம். இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில், இந்திய கடலோர காவல் படையினர், ஒரு கப்பலை சோதனையிட்டதில், 337 கிலோ ஹெராயின் பிடிபட்டது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், கொழும்பு துறைமுகத்தின் அருகாமையில், 5 கிலோ மீட்டர் தொலைவில், பாகிஸ்தானின் மக்ரான் துறைமுகத்தில் இருந்து வந்த மீன்பிடி கப்பல்களில் இருந்து மொத்தம் 290 கிலோ ஹெராயின் பிடிபட்டது. கடந்த மாதம் 29-ந் தேதி நாகப்பட்டினம் துறைமுகம் அருகே உள்ள கீச்சாங்குப்பம் ஆற்றுப் பகுதியில் இருந்து, இலங்கைக்கு 270 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது. அதனை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம் குஜராத்தில் பிடிபட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் போதை மருந்து தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த தம்பதியினரை, டெல்லி வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இருந்து, ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குஜராத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தக் கடத்தலில் தொடர்புடையோருக்கு, தலிபான் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது.
கடந்த ஜுலை மாதம் சென்னையில் வேளச்சேரியில், போதையில் இருந்த நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், போதை மாத்திரை விற்கும் கும்பல் சிக்கியது. ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீசார், 4 பேரைக் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் விழிஞ்சம் மற்றும் கொச்சி துறைமுகம் வழியாகவும், தமிழகத்திற்கு கோடிக்கரை, மண்டபம், வேதாரண்யம், தூத்துக்குடி வழியாகவும் போதைப் பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைகின்றது. அவை, கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள், சூடான், காங்கோ போன்ற வெளி நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதேபோல் திருச்சி விமான நிலையமும், போதைப் பொருள் கடத்தலின் மையமாக திகழ்கிறது. அங்கு சீரான இடைவெளியில் அவ்வப்போது போதைப் பொருள் பிடிபட்டாலும், அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் கடத்தப்பட்டுள்ள போதைப் பொருட்கள் எவ்வளவு என்பது தெரியவிஸ்ஸை. இதன் மூலம் போதைப் பொருள் கடத்தலுக்கு வழித்தடமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடத்தல் மாஃபியாக்கள் பயன்படுத்துவது இதன் மூலம் அம்பலமாகிறது. எனவே, மத்திய – மாநில அரசுகள் கண்காணிப்பை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
With Input from CSIS
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry