காந்தி சொல்லித்தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு அளித்தார்! ராஜ்நாத் சிங் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

0
5

மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் கருணை கோரி கடிதங்களை எழுதினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையாகியுள்ளது. 

வலதுசாரிகளால்வீர் சாவர்க்கர்என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று டெல்லியில் நடந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “சாவர்க்கர் ஓர் உறுதியான தேசியவாதி, இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் முதல் ராணுவ உத்தியாளர். மார்க்சிய மற்றும் லெனினிய சித்தாந்தங்களைப் பின்பற்றுவோர் சாவர்க்கரை ஃபாசிஸ்ட் என்று தவறாகக் குற்றம்சாட்டுகின்றனர். இந்திய வரலாற்றில் சாவர்க்கர் ஒரு முக்கியமான சின்னம் அவர் அப்படிப்பட்டவராகவே தொடர்வார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் அவரை தாழ்ந்து நோக்குவது முறையானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல. அவர் சுதந்திரத்திற்காக போராடியவர். அவருக்கு பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு முறை ஆயுள் சிறை தண்டனை விதித்து என்றார்.

சாவர்க்கர் குறித்து தொடர்ச்சியாக பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலமுறை மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாத்மா காந்திதான் அவரை கருணை கோரும் கடிதங்கள் எழுதச் சொன்னார். சுதந்திரப் போராட்டம் எந்தவித பிரச்னையும் இன்றி அடுத்த கட்டத்துக்கு முன்னேற ஆங்கில அரசின் கருணை கோரி கடிதம் கொடுக்குமாறு சாவர்கரிடம் காந்தி கூறினார்என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

இதனிடையே, காந்தி சொல்லித்தான் சாவர்கர் கருணை மனு அளித்தார் என்பதற்கான ஆதாரங்களை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டவில்லை. இதனால், அவரது கருத்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஏனென்றால், சட்டப்படிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, இந்தியா வந்தது ஜனவரி-9 1915-ல் தான். ஆனால், 1913-ம் ஆண்டே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்கர் தனது முதல் கருணை மனுவை அளித்துள்ளார். அதில், பிரிட்டிஷ் காலனி அரசுக்கு எந்த வகையிலும் உதவத் தயாராக இருப்பதாகவும், அரசு எதிர்பார்க்கும் வகையில் தனது செயல்பாடுகள் இருக்கும் எனவும் எழுதியுள்ளார்.

ஆனால், ஜனவரி 25, 1920-ம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்கருக்கு காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், தங்களுக்கு அறிவுரை சொல்வது மிகவும் கடினம். V.D. சாவர்கர் மீதான குற்றச்சாட்டுகள் முழுவதும் அரசியல் சார்புடையவை. இந்த வழக்கு தொடர்பாக நான் கவன் கவனம் எடுத்துக்கொள்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறார். எனவே, காந்தி சொல்லித்தான் சாவர்கர் கருணை மனு அளித்தார் என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry