மக்கள் தொலைக்காட்சி செப்டம்பர் – 6, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்த தொலைக்காட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் இயங்குகிறது. சமுதாயத்துக்குத் தீங்கானவை எனக் கருதும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில்லை என்ற கொள்கையை தொலைக்காட்சி நிர்வாகம் பின்பற்றி வருகிறது.
அதேபோல், சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களையும் இத்தொலைக்காட்சி முற்றிலுமாக நிராகரித்து வந்திருக்கிறது. பல தமிழ் ஊடகங்கள் பெருமளவில் பிறமொழிச் சொற்களை பயன்படுத்திவரும் நிலையில், பிற மொழிகள் அதிகம் கலவாமல் நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் தனித்து நிற்கும் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம், ஜூலை 31ஆம் தேதியுடன் சட்டப்படியான செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்ப இருப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறது. சேனலை தொடர்ந்து நடத்தும் நிர்வாகம், ஊழியர்களிடம் மிகப் பொதுவாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் ஒற்றை அறிவிப்பில் வீட்டுக்கு அனுப்புவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதுடன், தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். எனவே ஊழியர்களைப் பணியில் இருந்து அனுப்பும் முடிவை மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்து, திரும்பப்பெற வேண்டும்.
ஒரு வேளை, ஆட்குறைப்பு செய்வதில் நிர்வாகம் உறுதியாக இருந்தால், தொழில் தகராறு சட்டத்தின்படி செட்டில்மெண்ட் வழங்க வேண்டும். அதனை ஊழியர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களிடம் நிலவும் குழப்பத்தைத் தணிக்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது. ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொழிலாளர் துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry