திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் அரிவாளால் வீடேறி வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, பள்ளி கல்லூரிகளில் சாதி, மத பாகுபாடுகள் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இதில் ஆய்வுகளை மேற்கொண்ட சந்துரு, 20 பரிந்துரைகள் அடங்கிய 650 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில்…
- அரசுப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்த சமூக அடையாளங்களும் இருக்கக் கூடாது.
- தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கவேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி ஏற்ற பிறகே புதிய பள்ளிகள் தொடங்க அனுமதி தரவேண்டும்.
- குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
- ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டைக் கண்டறிய வேண்டும்.
- கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்.
- மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டிருப்பவை உள்பட பல பரிந்துரைகளை சந்துரு வழங்கியிருந்தார்.
இந்த அறிக்கைக்கு பல மட்டங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதிலுள்ள பரிந்துரைகள் குறிப்பிட்டதொரு சமுதாயத்தை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும், பாரபட்சமாக உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மூத்த அரசியல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், சந்துரு அறிக்கை மேலும் சிக்கலைதான் தமிழகஅரசுக்கு உண்டு பண்ணும், இது நடுநிலையான அறிக்கை இல்லை என புலனப்பதிவில் கூறியுள்ளார். மேலும், பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, திலகம் இட்டுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் தனது அரசு ஆலோசனைக்கான அறிக்கையில் நீதிபதி சந்துரு சொல்லுகிறார்.
இது முற்றிலும் அபத்தமாக இருக்கிறது. நாத்திகம் பேசட்டும், முற்போக்கு பேசட்டும், இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்கள் திலகமிட்டுக் கொள்வது என்பது மரபு சார்ந்த பாரம்பரியமான வழக்கம். தமிழின் சங்கத் திணைகளில் கூட ஆண்கள் போருக்குச் செல்லும்போது வெற்றி பெற்று வர வேண்டும் என்று அவர்களது நெற்றியில் வீரத் திலகமிட்டு அனுப்புவதை எல்லாம் படித்திருக்கிறோம்.
அது ஒரு மங்களத்தின் குறியீடு மட்டுமல்ல கண்ணாறுகளின் பெயரால் செல்லமும் அழகும் சேர்ந்த ஒரு கலைச்செயல். அக்காலத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொட்டிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நீதிபதி சந்துரு அவர்கள், இத்தகைய மக்கள் வழக்காறுகளை எதோ மதக் குறியீடு என்றும், அதுவே மத அதிகாரம் என்பது போலவும் வகைப்படுத்துகிறார். இந்த அறிக்கையில் காணப்படும் பல விஷயங்களை பார்க்கும் போது, என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல, பலருக்கும் மிகுந்த அபத்தமாகவும் நடைமுறைக்கு பொருந்தாத தான் தோன்றித்தனமான மிகை மதிப்பீடுகளாகத்தான் புரிந்து கொள்ளப்படும்.
தன்னைக் கம்யூனிஸ்ட்காரர் என்று சொல்லிக் கொள்ளும் முன்னாள் நீதிமான் சந்துரு அவர்களுக்குத் தெரியாதா? இந்தியாவைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வந்த பெண்களும், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் மனைவிமார்களும் பொட்டிட்டுக் கொள்வது இல்லையா? தோழர் பிரகாஷ் கரத்துடைய மனைவி பிருந்தா, உ. வாசுகி போன்றோர் நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு தானே பொதுவெளிகளுக்கு வருகிறார்கள். தெலங்கானா சாயுத போராட்டம் வரலாற்றில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா பொட்டு வைத்த பெண் போராளிகளை குறிப்பிடுகிறார. அண்ணாவும் பொட்டைப் பற்றி எழுதியுள்ளார்.
தமிழ்ச் சங்க இலக்கியங்கள், கவிதைகளை எழுதி வந்த பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பலரும் நெற்றியில் திலகம் இட்டு வாருங்கள் என்று தான் சொல்கிறார்கள். இப்படி தமிழ்க் காலாச்சாரத் தரவுகள் உண்டு. இதில் என்ன தவறு இருக்கிறது? இப்படியான ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் அறிக்கைகளால் தான் இங்கே ஜாதிக் கலவரம், மதக் கலவரம் போன்றவை மேலும் தூண்டப்படுகின்றன.
நான் ஏற்கனவே பல முறை சொன்னது மாதிரி இந்துக் கோவில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கட்டும், மசூதிகளில் பாங்கு ஓதி தொழுகை நடக்கட்டும், கிறிஸ்தவ தேவாலயங்களில் மணியோசைகளுடன் பிரார்த்தனைகள் நடக்கட்டும். சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் கிரந்தங்கள் ஓதப்படட்டும். இப்படி அவரவர் நம்பிக்கைப் பிரகாரம் அவரவர்களுடைய வழக்கங்களும் வழிபாடுகளும் நிகழட்டும்.
அப்படித்தானே பல காலமும் இருந்து வந்திருக்கிறது! இதில் குறுக்கீடு செய்வதன் மூலம் ஒருவர் என்ன அடைய நினைக்கிறார். பண்பாட்டுக் கலாச்சாரங்களில் தலையிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா பல்வேறு நாகரிகங்கள் கொண்ட தொன்மையானது. சந்துரு சொல்வது மாதிரி பொட்டிட்டுக் கொள்வது வெறும் அடையாளங்கள் சார்ந்தவை மட்டுமல்ல. பல தொன்மங்களையும், சடங்கியல்களையும் உள்ளடக்கியது. அவற்றை எல்லாம் பகுத்தறிவுக்குள் கொண்டு வரும்போது அது குறிப்பாக யாரை நோக்கி குறி வைக்கப்படுகிறது என்பதுதான் இங்கு அரசியல் ஆகிறது. மட்டுமல்ல பல பிரச்சனைகளுக்கும் காரணம் ஆகிறது.
அரசியலை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும்! இந்த வழக்காறுகள் மேல் கை வைக்க கூடாது! தனது சொந்தக் கருத்தாக இருந்தாலும் கூட அதைச் சூழலின் மீதான நடைமுறை மற்றும் நடுநிலையோடு தான் முன்வைக்க வேண்டும். இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்வதையே நான் தவறு என்கிறேன். இது உண்மையில் ஒரு மத நல்லிணக்க நாடு! (Communal harmony not secular) எல்லா மதங்களும் இங்கு உண்டு, உயிர்த்து வாழ உரிமை உள்ள நாடு என்பதுதான் எனது நம்பிக்கையும் என்னுடைய நடுநிலைவாதமும்.
இதற்கு மேல் மேதமை உள்ளவர்கள் இதில் ஏதேனும் இப்படியான பிரச்சனைகளைக் கொண்டு வரும்போது உண்டாகும் முரண்பாடுகளால் ஒற்றுமைக்கு சிக்கல் வருவதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வழியில் சந்துருவின் இந்த அறிக்கை தமிழக அரசுக்கு மேலும் சிக்கலைத் தான் உண்டு பண்ணும். இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் கூட பெண்கள் பொட்டிட்டுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். எதையும் பரிசீலிக்காமல் அறிவார்ந்த தளத்தில் நாம் ஒன்றைச் சொல்லும் போது அது அபத்தமாகி விடுவதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது நீதி அரசர்களுக்கு மட்டுமல்ல தேச நல்லிணக்கத்தை விரும்பும் எந்தச் சாமானியர்களுக்கும் பொருந்தும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry