விவசாயிகள் போராட்டம், அக்னிபத் போராட்டங்களில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்! உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

0
83

இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் 18-வது ஆண்டு விழாவையொட்டி அதன் மத்திய குழு சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு 21 பக்க அறிக்கை சமீபத்தில் அனுப்பப்பட்டது.

அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. “கடந்த ஓராண்டில் எதிரிகளின் (பாதுகாப்பு படைகள்) தாக்குதலால் 124 போராளிகள் (மாவோயிஸ்ட்கள்) உயிரிழந்தனர். இதில், அமைப்பின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அகிராஜு ராஜகோபால் உள்ளிட்டோரும் அடங்குவர். கட்சியில் புதிய பிரிவுகளை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறோம். அவர்கள் மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை போருக்கு தயார் செய்வார்கள்.

Also Read : திமுகவுக்கு முழுக்குப் போட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன்! கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

விவசாயிகள் போராட்டத்தில் நமது கட்சி பங்கேற்றது. டெல்லியிலும் நாட்டின் இதர பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் நமது போராளிகள் தீர்க்கமாக போரிட்டனர். இதன் காரணமாகவே மத்தியில் ஆளும் மோடி அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் நமது போராளிகள் முக்கிய பங்கு வகித்தனர்.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். சிறுபான்மையினர், தலித்துகள், புதுமைவாதிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவுகின்றனர். இதை தடுக்க வேண்டும். உணவுக்காக போராடும் ஏழைகளின் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும்.

கொரோனா, உக்ரைன் போரால் உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டின் 77 சதவீத வளங்கள், 10 சதவீத முதலாளிகளிடம் உள்ளது. 20 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்த நேரத்தில் புதிய ஜனநாயக புரட்சியை தொடங்கவேண்டும். நவீன காலனி அரசுக்கு எதிராக மக்கள் போர் தொடங்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 100 போராட்டக்காரர்கள், 89 போலீஸார் காயமடைந்தனர். வன்முறையை தூண்டியதாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அறிக்கையின் மூலம் அந்த அமைப்பை சேர்ந்த மாவோயிஸ்ட்கள், விவசாயிகளின் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கடந்த ஜூனில் வடமாநிலங்களில் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. ஏராளமான ரயில்கள் எரிக்கப்பட்டன. ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்திலும் மாவோயிஸ்ட்கள் ஊடுருவியது அவர்களது அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது.

இந்தப் போராட்டங்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பு ஊடுருவி இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் அதை உறுதிபடுத்த முடியாமல் இருந்தது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அறிக்கையின் மூலம் இது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் இதுநாள் வரை மலையோர கிராமப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த மாவோயிஸ்டுகள், தற்போது நகரப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

With Input Hindu Tamil Thisai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry