திமுகவுக்கு முழுக்குப் போட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன்! கனிமொழிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

0
134

சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவரிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் தளபதி முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று அரசு பணிகளையும் கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த நிறைவோடு அரசிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

2021-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனது மனைவி தோல்விக்கு அமைச்சர் முத்துசாமிதான் காரணம் என்று சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

கணவரின் விமர்சனத்திற்கு சுப்புலட்சுமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, சுப்புலட்சுமியின் சம்மதத்தோடு தான் ஜெகதீசன் விமர்சனங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கட்சி மீது தனக்கு இருந்த அதிருப்தியை கணவர் மூலம் சுப்புலட்சுமி காட்டியதாக கட்சியினர் பேசிக்கொண்டனர்.

Also Read : விமான நிலையத்துக்கு எதிராக தொடரும் போராட்டம்! அரசு இரட்டை கொள்கையை கையாளுகிறதா என திருமா கேள்வி!

முன்னாள் அமைச்சரான தனக்கு இனிமேல் தி.மு.க.வில் எதிர்காலம் இருக்காது என்று, நன்கு தெரிந்ததால் தான் சுப்புலட்சுமி கட்சிக்கு முழுக்கு போட்டுள்ளார் என்று தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் முத்துசாமியுடன் சுப்புலட்சுமிக்கு மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. தனது நெருங்கிய குடும்ப நண்பரான பாஜக வேட்பாளர் சரஸ்வதியை வெற்றி பெற வைக்க அமைச்சர் முத்துசாமி திரைமறைவு வேலைகளை செய்தார் என்று சுப்புலட்சுமி தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறி வந்தார்.

தேர்தலில் தனகு எதிராக செயல்பட்ட இரண்டு ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் கட்சிப் பதவி தர வேண்டாம் என்று தலைமையிடம் சுப்புலட்சுமி முறையிட்டுள்ளார். ஆனால் அவர் புகார் கூறிய இருவருமே மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியை பெற்றனர். அடுத்து வரும் பொதுக்குழுவில் அவரிடம் இருந்து துணை பொதுச்செயலாளர் பதவியை பறிக்கவும் தலைமை திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கட்சியில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதை உணர்ந்தே, பொறுப்பை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகியுள்ளார். தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பதவி விலகியது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி. கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியைத் தாண்டி அவரை அரசியல் செய்ய விடுவதில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியுள்ள நிலையில், அவர் வகித்த துணை பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி எம்.பி.க்கு தர வேண்டும் என்று அவர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry