விமான நிலையத்துக்கு எதிராக 55வது நாளாக போராட்டம்! அரசு இரட்டை கொள்கையை கையாளுகிறதா என திருமா கேள்வி!

0
37

காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய்,
மேல்பொடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் 55-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை இணைத்து பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Also Read : நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

இந்த திட்டத்தை எதிர்க்கும் மக்கள், “பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம். ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு, 80 சதவீத மக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும்” என்று கூறுகின்றனர்.

ஏகனாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “1350 ஏக்கர் நீர்நிலை பகுதியில் அழித்தால் தான் விமான நிலையம் அமைக்க முடியும் எனில், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் 100க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிப்பதும் ஆரோக்கியமானது அல்ல.சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கி.மீ அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க மாற்றம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. முதலமைச்சரை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்க உள்ளோம்.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry