இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, “தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும். மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் தென் பகுதியில் இருந்து, வட பகுதி நோக்கி காற்று நகர்கிறது. இதன் காரணமாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், மீனம்பாக்கத்தில் அதிகப்படியாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, மீனம்பாக்கத்தில் இன்று பெய்துள்ள மழை அளவு கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச மழை அளவாகும். இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று, 282.2 மி.மீ மழை பெய்துள்ளது. இரண்டாவது அதிகபட்ச மழையாக இன்று 158.2 மி.மீ பதிவாகியுள்ளது.
Also Read : ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!
அதேபோல, நுங்கம்பாக்கத்தில் இன்று 84.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது, 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மழை அளவில் மூன்றாவது அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் – 347.9 மி.மீ மழையும், 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 191.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
குமரிக் கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 45 – 55 கி.மீ வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சராசரி இயல்பான மழை அளவு 34.4 மில்லி மீட்டர். ஆனால் பதிவான மழை அளவு 30.5 மி.மீ இது இயல்பை விட 11% குறைவு” என கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry