ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!

0
1843
MGNREGS workers | File Image

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்கள் 560 பேர் மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்கள் 560 பேரும், 100 நாள் வேலைத்திட்டத்தை தணிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்கள். அரசு வழிகாட்டுதல்படி, மாநில அளவில் போட்டித் தேர்வு (with negative mark) எழுதி, நேர்முகத் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, பின்னர் ஐதரபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் National Institute of Rural Development and Panchayati Rajன் கீழ் உரிய பயிற்சி மற்றும் பொறுப்புடமை சான்று பெற்று 2014 மற்றும் 2015ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டனர். பணி நியமனத்தில் இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட்டது.

Also Read : சிறைவாசிகள் முன்விடுதலைக்காக புதிய கொள்கை? ஆதிநாதன் குழு பரிந்துரை என்னவாயிற்று?

100 நாள் வேலைத் திட்டத்தை தணிக்கை செய்யும் பணி என்பதால், மத்திய அரசு நிதியில் இருந்துதான் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. வட்டார வள அலுவலர்களுக்கு பிடித்தம் போக ரூ.14,000 ஊதியம் பெற்று வந்தனர். கடந்த 9 ஆண்டுகளாக ஏப்ரல் – மார்ச் என ஒப்பந்தமானது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக தனது அடையாளத்தை மறைத்துப்பேசிய வட்டார வள அலுவலர் ஒருவர், ஆறு வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை எனக் காரணம் கூறி கடந்தாண்டு 9 மாதம் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் நிதி பெறத் தவறியதே இதற்குக் காரணம். ஊதியம் கோரி ஆகஸ்ட் 15ல் போராட்டம் நடத்த உள்ளதாக நாங்கள் அறிவித்தோம். இதனால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எங்கள் மேல் கோபம் அடைந்தனர்.

9 மாதங்களாக ஊதியம் இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சருக்கு மனு அளித்தோம். அவரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டது. எங்கள் மீது ஏற்பட்ட கோபம் தீராத அதிகாரிகள், மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர் என்ற எங்களது பதவியின் பெயரை மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுனர் என மாற்றம் செய்தனர். பிறகு, தொகுப்பூதியம் என்பதை மதிப்பூதியம் எனவும், வள அலுவலர்கள் என்ற எங்கள் பதவியை தன்னார்வலர்கள் என்றும் மாற்றினர்.

Also Read : சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

இதற்கெல்லாம் உச்சமாக, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். இருந்தபோது, எண் 17 என்ற ஒரே அரசாணை மூலம் 31.05.2023 அன்று ஒட்டுமொத்தமாக 560 பேரையும் பணி நீக்கம் செய்துவிட்டார்கள். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரியும் போது EPF அடிப்படையில் நாங்கள் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்களாகவோம். அதுவும் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு எடுத்து இருந்த பெண் வட்டார வள அலுவலர்களை பணி முடிப்பு (Termination) செய்துவிட்டார்கள்.

இப்போது எங்கள் 560 பேருக்கு பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 9 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வேதனையில், அன்றாட வாழ்க்கையை நகர்த்துவற்கே மிகவும் சிரமப்பட்ட சூழலில், விரக்தி மன நிலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது தவறா? அதற்காக பணி நீக்கம் என்ற தண்டனை தருவதுதான் சரியா? இது எந்த வகையில் நியாயம் என்று எங்களுக்கு புரியவில்லை?

முதலமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மனு அளித்துவிட்டோம். ஆனால், இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அரசாணை 17ஐ ரத்து செய்ய வேண்டியும், மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக்கோரியும் மனுத்தாக்கல் செய்தோம். இதனை விசாரித்த நீதிமன்றம், அரசாணைக்கு மட்டும் தற்போது தடை விதித்துள்ளது.

Also Read : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!

தப்பு செய்தவர்களை தண்டிக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. தவறு செய்வதவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒட்டுமொத்தமாக 560 பேரையும் பணி நீக்கம் செய்து, எங்களது வாழ்க்கையை சூனியமாக்கியது எந்த வகையில் நியாயம்? எங்களில் பெரும்பான்மை சதவிகிதத்தினர் 45 வயதைக் கடந்துவிட்டோம். 9 ஆண்டுகளாக வள அலுவலராக பணியாற்றிவிட்டோம். எங்களுக்கு வேறு யார் பணி கொடுப்பார்கள்? எங்கள் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்களுக்கு மீண்டும் பணி வழங்கி, எங்களது குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன், பணி வழங்கும் வரை குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.” இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.

Featured Videos from VELS MEDIA

தண்ணீருக்கு உயிர், ஞாபகசக்தி உள்ளதா?|water has memory~water has consciousness!|K.Gopinath

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry