கர்நாடக அமைச்சருடன் எதற்காகப் பேச்சுவார்த்தை? துரைமுருகனுக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்!

0
71
TN Opposes Karnataka Minister's Remarks On Mekedatu Project

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கிற, நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் சிவக்குமார், மேகேதாட்டுவில் அணை கட்டிய தீருவோம்; அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் உச்சநீதிமன்ற தீர்ப்பை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானதாகும்.

தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஊடகங்களில் வந்திருக்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சட்ட நடவடிக்கைக்கு மீறி பேச்சுவார்த்தை என்பதை ஏற்க இயலாது.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தெளிவுபடுத்தி உள்ளது. எனவே ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களும் காவிரி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது. தேவையும் இல்லை.

Also Read : கருணாநிதியின் அரசாணையை நிராகரிப்பது நியாயமா? அரசுக்கெதிரான மனக்குமுறலை வெளிப்படுத்தும் அரசு மருத்துவர்கள்!

எனவே கூட்டணி என்கிற பெயரால் அண்டை மாநில உறவுகள் என சொல்லி தமிழ்நாடு அரசு சமரசம் செய்து கொள்ள முயற்சிக்குமேயானால் அதை விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக கடந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பசவராஜ் பொம்மை அரசு  பொறுப்பேற்ற உடனேயே பிரதமர், நீர்ப் பாசனத்துறை அமைச்சர், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து ஒரு வார காலம் டெல்லியில் முகாமிட்டு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான அனுமதி பெற முயற்சித்தார்.

அனுமதி கிடைக்காத நிலையில் 2022 கர்நாடக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு 9000 கோடி  ஒதுக்குவதாகவும், அணை கட்ட வேண்டுமானால் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது. எனவே சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என  எழுத்துப் பூர்வமாகவும் அறிவித்திருக்கிறார்.

நிலைமை இவ்வாறு இருக்க, புதிதாக பொறுப்பேற்று இருக்கிற சிவக்குமார் சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும்.
சமரசத்திற்கும் இடம் அளிக்கக்கூடாது. தேவையானால் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவரது அறிவிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுமேயானால் விவசாயிகள் முறையிட தயங்க மாட்டோம்” என தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry