ஆவின் பால் கொள்முதல் குறைவு! விநியோகத்தில் பெரும் குளறுபடி! முதலமைச்சர் தலையிட பாமக வலியுறுத்தல்!

0
41
PMK wants Aavin to raise procurement price

இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆவின் பால் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தான் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம் ஆகும்.

ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது; அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நேற்று உறுதியளித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

Also Read : கர்நாடக அமைச்சருடன் எதற்காகப் பேச்சுவார்த்தை? துரைமுருகனுக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்!

அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயர்வும் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இந்த பாதிப்புகளை போக்கி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை செய்யாவிட்டால் நாளுக்கு நாள் ஆவின் பால் கொள்முதல் மோசமடைவதை தவிர்க்க முடியாது.

ஆவின் நிறுவன சிக்கலில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். மற்றொருபுறம் ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழகத்தின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50% அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry