அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை! ஐகோர்ட் அதிரடி உத்தரவு

0
29
The cadres celebrated by distributing sweets at the AIADMK headquarters following the Madras High Court order.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொதுச்செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை. பொதுச் செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை, அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வாதிட்டார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி , “உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்துவிட்டது. எனவே, இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சதீஷ்குமார், “எத்தனை முறை இந்த விவகாரத்தில் இருதரப்பும் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? அவகாசம் கேட்பீர்கள்? ஒரே வாதத்தை எத்தனை முறை வைப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது ஈபிஎஸ் தரப்பில், “நான்கைந்து மாதங்களில் முக்கியமான நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார். அதிமுகவில் உள்ள தங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனவே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry