சமூக நீதி கூட்டமைப்பு! ஓபிஎஸ்-க்கு ஸ்டாலின் அழைப்பு! சமூகநீதிக்கு இடஒதுக்கீடு போதுமானதல்ல!

0
108

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ் கட்சி), சீதாராம் யெச்சூரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்), எச்.டி. தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), என்.சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), மமதா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்), மெஹ்பூபா முப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி), உத்தவ் தாக்கரே (சிவ சேனா), அரவிந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி), கே.சந்திரசேகர ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), என்.ரங்கசாமி (என். ஆர். காங்கிரஸ்), லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), பவன் கல்யாண் (ஜன சேனா), வேலப்பன் நாயர் (அகில இந்திய பார்வார்டு பிளாக்), அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்), கே.எம். காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ரேனு ஜோகி (ஜனதா காங்கிரஸ்), அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்), சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்), சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி – ராம் விலாஸ்), ராஜ் தாக்கரே (மகாராஷ்டிர நவநிர்மான் சேனா), ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்), கே.எம்.மணி (கேரளா காங்கிரஸ் -எம்), ஓ.பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க), வைகோ (ம.தி.மு.க), மருத்துவர். ராமதாஸ் (பா.ம.க), தொல். திருமாவளவன் (வி.சி.க), பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.ம.க), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க) என இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சி தலைவர்களை இக்கூட்டமைப்பில் இணையுமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான்.

இக்கடிதத்தை நான் எழுதும் இவ்வேளையில், தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம், பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.
இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.

ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry