நதியா மீது கிரஷ்! பொதுவெளியில் சொன்ன நடிகர்! ’அடடே சுந்தரா’ டீஸர் வெளியீட்டில் பரபரப்பு!

0
314

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் நானி பேசும்போது, ”அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். ஜூன் 10ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில், ”இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள், ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகரும் இயக்குநருமான அழகம் பெருமாள் பேசும்போது, ”எனக்கு இது முக்கியமான திரைப்படம். நான் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. தமிழைத் தவிர வேறு மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஏனெனில் ஒவ்வொரு மொழி திரைப்படங்களில் பணியாற்றும்போது ஒவ்வொரு வகையான கலாச்சாரத்தையும், வித்தியாசமான சிந்தனை கொண்ட படைப்பாளிகளையும் காணலாம். பழகலாம். அவர்களிடமிருந்து பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்ளலாம். வேறு மொழிப் படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் புத்துணர்ச்சி மிக மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், வேறு மொழி படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அந்தவகையில் ‘அடடே சுந்தரா’ அற்புதமான அனுபவத்தை வழங்கிய திரைப்படம். படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இளம் திறமைசாலி. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என திறமையான தொழில்நுட்ப குழுவினருடன், திறமைவாய்ந்த நடிகர் நானி, நஸ்ரியா, ரோகிணி, நதியா போன்றோருடன் நடித்தது மறக்க இயலாதது. இந்தப்படத்தில் நானும், நதியாவும் ஜோடிகளாக நடித்திருக்கிறோம். என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் நதியா மீது எனக்கு கிரஷ் இருந்தது. படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நான் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாக அமைந்தது. இதற்காக உளமார மகிழ்ச்சியடைந்து நன்றி கூறுகிறேன்.” என்றார்.

நடிகை ரோகிணி பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் நானும், நானியும் பணியாற்றும்போது நிஜமாகவே தாயும் மகனையும் போலவே பழகுவோம், நடந்துகொள்வோம். இந்த படத்தில் கதைதான் ஹீரோ என சொல்லலாம்.” என்றார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry