நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்த முருகன் – உச்சிமாகாளி தம்பதியின் மகன் செல்வசூர்யா. இவர்களது மகள் பவித்ரா. இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வசூர்யா 12ம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் அடைச்சாணியை சேர்ந்த வேறு சமுகத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கையில் ஜாதி ரீதியான கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வ சூர்யாவுக்கு மற்ரும் அவருக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் பொதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் கல்லால் செல்வசூர்யாவை காதோரமாக தாக்கியதாக தெரிகிறது. அவருக்கு காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமாதானப்படுத்தியுள்ளனர். பாப்பாக்குடி போலீசாரும் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த செல்வசூர்யாவிற்கு இரவில் தலைவலி ஏற்பட்டுள்ளது. அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை செல்வசூர்யா உயிரிழந்தார். இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், பாப்பாக்குடி மற்றும் பள்ளக்கால் புதுக்குடி பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செல்வ சூர்யாவை தாக்கியதாக கூறப்படும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மீது கொலை (302) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கக் கேடு உள்ளதாகவும், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry