2022ன் முதல் சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?

0
201

இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது. இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில், இரண்டு சந்திர கிரகணங்கள், இரண்டு சூரிய கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. 30.4.22 – சனிக்கிழமை – சூரியகிரகணம்,
16.5.22 – திங்கள் கிழமை – சந்திர கிரகணம், 25.10.22 – செவ்வாய்க்கிழமை – சூரியகிரகணம், 8.11.22 – செவ்வாய்க்கிழமை- சந்திரகிரகணம்.

சூரியனும் சந்திரனும் இணைந்து சஞ்சரிக்கும் நாள் அமாவாசை தினமாகும். அவை ராகுவுடன் இணைந்து சஞ்சாரிக்கும் நாளில் சூரிய கிரகணம் நிகழும். அதற்கு பின் வரும் பௌர்ணமி சந்திர கிரகணமாக அமையும். அந்த நாளில் சந்திரன் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பார். இந்த இயற்கை நிகழ்வுகளைப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்து அவற்றைக் கடைப்பிடிக்கும் முறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

Representational Image; Photo Credit – Getty Images

வானியல் அறிவியல்படி, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வதைத் தான் சூரிய கிரகணம் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணியளவில் தொடங்கும். அதிகபட்சமாக இந்தியாவில் அதிகாலை 2.11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 4.07 மணிக்கு முடிவடையும். இரவு நேரம் என்பதால், இந்தியாவில் யாரும் இதைப் பார்க்க முடியாது. இதைப் போலவே மே 16ம் தேதி நிகழும் சந்திர கிரகணமும் தலைகீழாகவே நடக்கும். அது இந்தியாவில் பகல் நேரத்தில் நிகழும். இந்திய நேரப்படி அது காலை 7.02 மணிக்கு தொடங்கும். முழுமையாக சந்திரன் காலை 7.57க்கு மறையும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே தெரியாது. ஆசியாவில் இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில்தான் நடக்கும். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் இந்தத் தகவல்களை உறுதி செய்துள்ளது. பிற நாடுகளில் சனிக்கிழமை ஐஎஸ்டி நேர நிலவரப்படி நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி வரையிலும் கிரகணம் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் சூரிய கிரகணம் தென்படும் என்று நாசா கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல் அண்டார்டிக்காவில் ஒரு சில பகுதிகளிலும், பாஃல்க்லாந்து தீவுகள் உள்ளிட்ட தென் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், தெற்கு பசிஃபிக் மற்றும் தெற்கு கடல் ஆகிய பகுதிகளிலும் கிரகணம் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற உள்ள சூரிய கிரகணமானது பகுதியளவு மட்டுமே என்ற சூழலில், பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று நாசா தெரிவிக்கிறது. Timeanddate.com என்ற இணையதளம் சூரிய கிரகண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

Representational Image; Photo Credit – Getty Images

பொதுவாக கிரகண காலத்தில் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும். பலரும் முன்னோர் வழிபாடுகள் செய்வார்கள். பல பரிகாரங்களும் கடைப்பிடிக்கப்படும். ஆனால் இவை அனைத்துமே நமக்கு அந்த கிரகணம் தெரிவதைப் பொறுத்தே பின்பற்றப்பட வேண்டியவை. எனவே நமக்குத் தெரியாத கிரகணத்துக்கு எந்த நியமங்களும் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேத வித்வான்கள் தெரிவிக்கின்றனர்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நேற்று அதிசார சனிப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்கும் நிலையில் சனி பகவான் செவ்வாயோடு இணைந்திருக்கிறார். பொதுவாகவே சனி செவ்வாய் சேர்க்கை நல்ல பலன்களைத் தராது என்று சொல்வார்கள். இந்த வேளையில் சூரிய கிரகணமும் நிகழ்வது அரசு, அரசியல் தொடர்பான சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். தனிப்பட்ட வாழ்விலும் சிலருக்கு சிக்கல்கள் நேரலாம் என்பதால், இந்தக் கிரகண வேளையில் இறைவழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக சனி தசை நடப்பவர்கள், ஏழரைச் சனி பாதிப்பில் இருப்பவர்கள், அஷ்டம மற்றும் அர்த்தராஷ்ட்ரம சனியினால் துன்புறுபவர்கள் மாலை அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று இறைதரிசனம் செய்வது கெடுபலன்களைக் குறைத்து நற்பலன்களை அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

 

 

 

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry