பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைத்த பிறகு, 2024 தேர்தலை எண்ணத்தில் வைத்து பிற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பாட்னாவில் கூட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியா கூட்டணியாக உருவெடுத்தது. தற்போது இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி என 28 எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கூட்டணியில் எல்லாம் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்க, இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் தங்களிடம் சீட் பகிர்வு பற்றி பேசாமல் தனியாகக் களமிறங்கியிருக்கிறது என சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியது. மேலும், 2024-ல் உத்தரப்பிரதேசத்தில் 65 இடங்களில் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் சமஜ்வாதி அறவித்தது. இதனால் இண்டி கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், 2024 தேர்தலுக்கு முன்பே இந்தியா கூட்டணி உடைந்துவிடும் என்று கூறும் பா.ஜ.க-வுக்குத் தீனி போடும் வகையில், காங்கிரஸ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதாக, இண்டி கூட்டணிக்கு அடித்தளமிட்ட நிதிஷ் குமார் விமர்சித்திருக்கிறார்.
பாட்னாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியப் பேரணியில் உரையாற்றிய நிதிஷ் குமார், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி தொடர்பாக எந்த வேலையும் நடைபெறவில்லை. நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேசினோம். நாட்டின் வரலாற்றை மாற்ற முயல்பவர்களிடமிருந்து இந்த நாட்டை நாம் ஒன்றாக இணைந்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்காக, பாட்னா உட்பட பிற இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். இண்டி கூட்டணியும் உருவானது. ஆனால், பெரிதாக எதுவுமே நடக்கவில்லை. தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் மட்டுமே காங்கிரஸும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் மட்டுமே மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். எனவே, ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, அவர்களே அனைவரையும் அழைப்பார்கள்” என்று கூறினார். டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி Vs காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி Vs மம்தா, கேரளாவில் காங்கிரஸ் Vs இடதுசாரிகள் எனத் தொடர்ந்து மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry