ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மக்களவையில் விவாதம்! மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு!

0
88
The Constitutional Amendment Bill regarding the simultaneous elections was introduced in the Lok Sabha after the first-ever e-voting in the Parliament. The motion of introduction was passed with a majority. A total of 269 votes were polled in favour of the motion while 198 were polled against the motion.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையில், இந்த மசோதா சட்டமானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தது.

Also Read : வாழைத்தண்டு சட்னி! சிறுநீரகம் தொடங்கி பல உறுப்புகள் பாதுக்காப்பாக இருக்க உதவுமாம்…!

மேலும், இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியது. இந்த திருத்தங்களை மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஏற்றது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஆரம்ப சுற்று விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.” என்று கூறினார்.

Also Read : ஜாஃபர் சாதிக் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரருக்கும் தொடர்பு! ED விசாரணையில் அம்பலம்! சிக்கலில் பள்ளிக்கல்வி அமைச்சர்!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.” என கூறி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிவசேனா (யுபிடி) எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசியல் சாசன திருத்தம் கோரும் இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கேட்டுக் கொண்டன. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்று, வாக்கெடுப்பு நடத்தினார். இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும் எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர். பாலு, “மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். மசோதாவை கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். “பிரதமரும் இதை விரும்பியதால் அதை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) நாம் அனுப்பலாம். இந்த மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும் என்று திமுகவின் டி.ஆர்.பாலு கூறினார். இதை ஜே.பி.சி.க்கு அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என்று பிரதமரே கூறியிருக்கிறார்.” என்று மக்களவையில் அமித் ஷா கூறினார்.

இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry