குடியரசுத் தலைவர் வரவுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு! உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

0
44
Petrol bomb attack on Raj Bhavan shows police paralysis: Edappadi K Palaniswami | File Picture

“இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழக ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்புக்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத் துறையும், காவல் துறையும் இந்த ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்துவிட்டதையே வெளிக்காட்டுகிறது” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பெட்ரோல் குண்டு வீசினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பது தெரிய வந்துள்ளது. தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கருக்கா வினோத்தை போலீஸார் கைது செய்தபோது
கருக்கா வினோத்

கருக்கா வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிண்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆளுநரின் செயலாளர் கிரிலோஷ் குமார் ஆய்வு செய்தார்.

Also Read : நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லாதது ஏன்? முட்டையை காண்பிக்கும் கூமுட்டை! வறுத்தெடுத்த டி. ஜெயக்குமார்!

இந்நிலையில், இந்தச் சம்பவம் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டதையே காட்டுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும் , மாண்பையும், அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டுக்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத் துறையும், காவல் துறையும் இந்த ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்துவிட்டதை வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Also Read : ‘இந்தியா’ இல்லை, இனி ‘பாரத்’! சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் பெயர் மாற்ற NCERT குழு பரிந்துரை!

மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப் பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது.

மாநிலத்தின் உச்சபட்ச பாதுகாப்புக்கு உரிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது. இது தான் திமுக மாடல்” என அவர் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர், சில மாதங்களுக்கு முன்பு கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஆவார். தமிழகத்தில் உளவுத்துறை எந்த அளவிற்கு கோட்டை விடுகின்றது என்பதற்கு இது உதாரணம்.” என்று கூறியுள்ளார்.

Raj Bhavan, Chennai.

கடந்த 2015ல் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என டாஸ்மாக் கடை மீது கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். அதன்பிறகு தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு அவர் பெட்ரோல் குண்டு வீசினார். கடந்த ஆண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஓராண்டாக சிறையில் இருந்தார்.

இவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிவையில் உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர் தற்போது ஆளுநர் மாளிகையை குறிவைத்துள்ளார். இதனிடையே, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அனைவரும் பாராட்டத்தக்க விளக்கத்தை அளித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry