
முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையில், ஒடிசா மாநிலம் மிகச்சிறப்பான நிலையை எட்டியுள்ளது. ஒடிசாவின் மாற்றம் என்பது, குறிப்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஆற்றல்மிக்க மாற்றங்களால் ஏற்பட்டது. இந்த வளர்ச்சியில், ஒடிசா முதல்வரின் நம்பிக்கைக்குரிய தளபதி வி.கே.பாண்டியன் எனும் கார்த்திகேய பாண்டியன் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்தவர்தான் வி.கார்த்திகேய பாண்டியன் எனும் வி.கே. பாண்டியன் ஐ.ஏ.எஸ். 49 வயதான இவர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2000-ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், 2002-ம் ஆண்டு அந்த மாநிலத்தில் இருக்கும் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல மாவட்டங்களில் வி.கே. பாண்டியன் ஆட்சியராகப் பணியாற்றிவந்தார். அந்த நேரத்தில் ஒடிசா ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஜாதா ரவுத்தை அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாகப் பணியாற்றிவந்த அவருக்கு, 2011-ம் ஆண்டு முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டபோது இன்னும் சிறப்பாகப் பணியாற்றினார்.
Also Read : ‘இந்தியா’ இல்லை, இனி ‘பாரத்’! சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் பெயர் மாற்ற NCERT குழு பரிந்துரை!
இது முதல்வர் பட்நாயக்கின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்துதான், அவர் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார் கார்த்திகேய பாண்டியன். ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகளுடனும் நட்பு பாராட்டியதால், அந்த மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். நவீன் பட்நாயக்கின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் நிர்வாக இயந்திரத்தை மாற்றியமைக்க 5T திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த 5T திட்டத்தை வகுத்துக்கொடுத்தவர், கார்த்திகேய பாண்டியன்தான். இதில் T’s என்பது ‘T’ransparency (வெளிப்படைத்தன்மை), ‘T’eamwork (குழுச்செயல்பாடு), ‘T’echnology (தொழில்நுட்பம்), ‘T’ime (நேரம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ‘T’ransformation-க்கு (மாற்றத்துக்கு) வழிவகுக்கிறது. அதன்கீழ், ஒடிசாவில் 4,000-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் மாற்றப்பட்டிருக்கின்றன.
இதேபோல பல திட்டங்களில் முக்கியப் பங்காற்றிவருகிறார் கார்த்திகேய பாண்டியன். குறிப்பாக `நமது ஒடிசா, புதிய ஒடிசா’ என்ற திட்டத்தை ரூ. 4,000 கோடி மதிப்பில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வெவ்வேறு திட்டங்களை மேற்கொள்ள ரூ.50 லட்சம் கிடைக்கும். இது இப்போது கார்த்திகேய பாண்டியனின் நேரடிப் மேற்பார்வையின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.
கார்த்திகேய பாண்டியனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், அவரின் செயல்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், கார்த்திகேய பாண்டியன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதுமட்டுமன்றி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் அடிக்கடி சந்திப்பும் நடத்துகிறார்.
இதற்கிடையில் கடந்த 20-ம் தேதி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கு மத்திய அரசு கடந்த 23-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இது குறித்து ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார், “மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி (Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவி, கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக்கீழ் நேரடியாகப் பணியாற்றுவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது மாநிலத்தில் அவருக்கு இருக்கும் அதிகப்படியான செல்வாக்கைக் காட்டுகிறது என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். இது தொடர்பாக பிஜு ஜனதா தள வட்டாரங்கள், “முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆலோசனையின் பேரிலேயே கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார். குறிப்பாக, கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படுவதுடன், மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்” என்கின்றன.
சமீபத்தில் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்த போது, மூன்றாவது நபராக பாண்டியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒடிசா முழுவதும் உள்ள பழங்கால கோவில்களை மீட்டெடுப்பதில் இவர் தீவிரம் காட்டி வருகிறார். ஆறு மாத காலத்திற்குள் ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை கார்த்திகேய பாண்டியன் மதிப்பீடு செய்துள்ளார்.
Also Read : டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இவர் ஆட்சியராகப் பணியாற்றியபோது, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தினார், பின்னர் அது தேசிய மாடலாக எடுக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. மயூர்பஞ்ச் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கான தேசிய விருதையும் பாண்டியன் பெற்றார்.

ஒடிசாவை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றுதல், மாநிலம் முழுவதும் சுகாதார வசதிகள், அனைத்து மாவட்டங்களிலும் நீர்ப்பாசன வசதிகள் மறுமலர்ச்சி, மிஷன் சக்தி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஒடிசாவை இந்தியாவின் எஃகு உற்பத்தி மையமாக மாற்றுதல் போன்றவைக்கு வி.கே.பாண்டியனின் உழைப்பு மிகப்பெரியது. ஒடிசா மாநிலத்தின் மருமகனான கார்த்திகேய பாண்டியன் மீது, மாநிலத்தின் மூலை முடுக்குகளில் உள்ள மக்கள் காட்டும் அதீத அன்பும் பாசமும் கொண்டிருப்பது, அவர் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் என்பதைக் காட்டுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry