ஆண்டிரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ’பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘பிசாசு’ படத்தில் பேயாக நடித்த பிரக்யா, ரசிகர்களின் பிரியங்களை அள்ளிக்குவித்த பேயாக மாறினார். அந்தளவிற்கு நடிப்பாலும், அழகாலும் ரசிக்க வைத்தார். பிசாசு படத்தில், மென்மையாக பயமுறுத்தியிருந்த மிஷ்கின், ‘பிசாசு 2’ வில் ஹார்ட் பீட் எகிறவைக்கும் அளவுக்கு மிரட்டியிருப்பது டீசரிலேயே தெரிகிறது. நடிப்புப் பிசாசு ஆண்ட்ரியாவுக்கு இப்படம் சரியான நடிப்புத் தீனி போட்டிருக்கும்.
டீசர் வழக்கமான மிஷ்கின் பட சாயலுடனே உள்ளது. நடந்து செல்லும் பாதங்கள், கைகள், ஊஞ்சல், பொம்மை, இருட்டில் தனியாக ஊஞ்சலில் ஆடும் ஆண்ட்ரியா, உருகும் மெழுகுவர்த்தி, மேகங்கள் கலையும் நிலா என ஒவ்வொரு காட்சிகளும் திகிலூட்டும்படியாகவே உள்ளன. டீசரில் எந்த வசனமும் இடம்பெறவில்லை. தனது இசையாலேயே குரல் கொடுத்து மிரட்டியுள்ளார் கார்த்திக் ராஜா.
யோனியுடன் காட்டப்படும் பெண்ணின் ஓவியம், ஆண்ட்ரியா ஒருவனை வெறிகொண்டு வெட்டுவது போன்றவை பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் பேய் கதையாக இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார். பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திண்டுக்கல், பவானிசாகர் போன்ற ஊர்களிலும், அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பிசாசு 2’ படத்தை இயக்குநர் மிஷ்கின்இயக்கி முடித்துள்ளார். வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry