பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை! இளநீர் விற்கும் திருப்பூர் தாயம்மாவுக்கு பாராட்டு!

0
94

மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “கல்வி பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் தெரிகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிக்கிறது.

அவருக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இவர்களது குடும்பம் பல ஆண்டுகளாக இளநீர் விற்று சம்பாதித்து வருகிறார்கள். பொருளாதார நிலை அவருக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தாயம்மாள் தனது மகன், மகளுக்கு கல்வி கற்பதற்கு எந்த தடைக்கல்லையும் ஏற்படுத்தவில்லை.

இவரது குழந்தைகள் சீன்னவீரம்பட்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பெற்றோர்கள் கூட்டம் நடந்த போது, வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிக்கான பண பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் தாயம்மாளும் பங்கேற்றிருந்தார். அவர் என்ன செய்தார் என்று யாராலும் நினைத்து பார்க்க முடியவில்லை. இளநீர் விற்று ஓரளவுக்கு சம்பாதித்த பணத்தை தாயம்மாள் பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார். உண்மையில் இதை செய்வதற்கு ஒரு பெரிய மனது, சேவை உணர்வு தேவை. அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரை இருப்பதாக தாயம்மாள் கூறுகிறார். இப்போது பள்ளியின் உள் கட்டமைப்பு மேம்பட்டால் மேல்நிலை கல்வி வரை வகுப்புகள் நடத்தப்படும்.

நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் குடும்பத்துடன் போர் நினைவிடம் செல்லுங்கள். அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்கமுடியும்.

பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எனது வாழத்துக்கள். பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் நமது நாட்டின் பாடப்படாத நாயகர்கள். இதுவரை 4.5 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

லடாக்கில் திறந்தவெளி செயற்கை தடகள மைதானம் மற்றும் கால்பந்துமைதானம் அமைக்கப்பட உள்ளது. நாம் நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், லஞ்சம், ஊழல் போன்றவை இருக்காது. எனவே லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க மக்கள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். இது மட்டுமின்றி மேலும் பல விஷயங்களையும் தனது 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதிவு செய்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry