நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார் . அப்போது பேசிய அவர், உலகளாவிய சூழ்நிலையால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.
மேலும் பேசிய பிரதமர், “கோவிட்-19க்கு எதிராக இந்தியா ஒரு நீண்ட போரை வலுவாக நடத்திக் காட்டியது. உலகளாவிய பிரச்சினைகளின் தாக்கத்தின் அடிப்படையில், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அதே போன்றதொரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலை, விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதால், நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய நெருக்கடியும் பல சவால்களைக் கொண்டுவருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டாட்சிக் கோட்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வை மேலும் மேம்படுத்துவது கட்டாயமாகிறது” என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “நாடு முழுவதும் உள்ள நகரங்களில் எரிபொருள் விலையை பட்டியலிட்டார். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. இதேபோல் வரிகளைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு சென்றடையச் செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியது.
சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும், சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒருவகையில் மக்களுக்கு மட்டும் இழைக்கப்படும் அநீதி அல்ல. இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நான் யாரையும் விமர்சிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக, மத்திய அரசு சொல்வதை கேட்கவில்லை. இது, அந்த மாநில மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைக்கப்பட்டது. மத்திய அரசு நவம்பரில் செய்ததைப் போல, மாநிலங்களும் வாட் வரியைக் குறைத்து அதன் மூலம் மக்கள் பயனடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பல மாநிலங்கள், பெரும்பாலும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள், மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் டெல்லி ஆகியவை மத்திய அரசின் முறையீட்டிற்குப் பிறகும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை. வரியைக் குறைக்காத எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநிலங்களோடு, விலையைக் குறைத்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, அந்த 7 மாநிலங்களும் கூடுதலாக ரூ.11,945 கோடி சம்பாதித்துள்ளன” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனிடையே, உலகளாவிய பிரச்சனைகள் இருந்தபோதும், எண்ணெய் உற்பத்தி செய்யாத நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் எரிபொருள் விலை குறைவாகவே உள்ளது. ஜனவரி 22-க்குப் பிறகு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை 33% உயர்ந்துள்ளது. ஆனாலும், பிரிக்ஸ் நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் வில் குறைவாக இருக்கிறது.
பிரேசில் – பெட்ரோல் ரூ.118.21, டீசல் ரூ.108.21
சீனா – பெட்ரோல் ரூ.111.22, டீசல் ரூ.99.98
இந்தியா – பெட்ரோல் ரூ.103.81, டீசல் ரூ.95.07
ரஷ்யா – பெட்ரோல் ரூ.46.88 டீசல் ரூ.47.93
தென்னாப்பிரிக்கா – பெட்ரோல் ரூ.111.69, டீசல் ரூ.118.90
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry