அதிகரிக்கும் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்! அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் – நடந்துநர்கள்!

0
515

அரசுப் பள்ளி மாணவர்கள் பலரது ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே நடனமாடுவது, மாணவ மாணவிகள் புகைப்பிடிப்பது, பீர் அருந்துவது என அரசுப் பள்ளி மாணவ – மாணவிகள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் காணொளிகள் அவ்வப்போது வெளியாகிறது. அதுமட்டமின்றி, வகுப்பறையில் ஆசிரியரின் தாய், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டும் மாணவன், அவரை அடிக்கவும் பாய்கிறான்.

இதேபோல், மாணவர்கள் வகுப்பறையில் தூங்குவது, வகுப்பறையிலேயே மாணவியின் மடியில் மாணவர் தலைவைத்து படுப்பது, வகுப்பறையில் மாணவன் ஒருவன் மாணவிக்கு தாலிகட்டுவது, சீருடை பட்டனை கழற்றிவிட்டு ரவுடி தோரணையில் பள்ளிக்கு வருவது, ஆசிரியர்களைக் கிண்டல் கேலி செய்வது போன்ற அநாகரிகமான செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பேருந்துகளில் ஏறிக்கொண்டு பயணிகளின் முன்பே மாணவிகள் மதுபானம் அருந்துவதும், புகை பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் to வயலக்காவூர் செல்லும் 34 B என்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு கலாட்டா செய்து வந்ததை பேருந்தின் நடத்துநர் செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த செல்போனை தட்டி விட முயற்சி செய்த மாணவர்கள், நடத்துநரை தரக்குறைவாக பேசி தாக்கவும் முயற்சித்துள்ளனர். இதையும் பொருட்படுத்தாமல், நடத்துநரும், ஓட்டுநரும் பலமுறை வேண்டியும், மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே சென்றனர்.

இதேபோல், சில தினங்களுக்கு முன் உத்திரமேரூரில் புறப்பட்ட தடம் எண்: ‘டி34’ அரசு பேருந்தில், பள்ளி மாணவ – மாணவியர் கலாட்டா செய்தும், படிகளில் தொங்கியும் சென்றனர். நடத்துநர் அவர்களைக் கண்டித்தார். காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதிக்கு பேருந்து வந்தபோது, அங்கிருந்த போலீசார் எச்சரித்தும் மாணவர்கள் கேட்காததால், காவல் நிலையத்திற்கு பேருந்து ஓட்டிச் செல்லப்பட்டது. கலாட்டா செய்த மாணவர்களை, காவல் நிலையத்தில் சிறிது நேரம் உட்கார வைத்து, போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.

காஞ்சிபுரத்தில் இருந்து புத்தாகரம் செல்லும் அரசு பேருந்தில் படிகளில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வரும்படி, ஓட்டுநர் முத்துகுமார் கூறினார். இதனால் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து புத்தாகரம் சென்றபோது, மணவர்களின் பெற்றோர், ‘என் மகனை திட்டுவதற்கு நீங்கள் யார்’ என, ஓட்டுநரிடம் தகராறு செய்தனர். இதுபோன்ற செயல்களால் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்கீனத்தால், ஆசிரியர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாக தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவர் வா. அண்ணாமலை கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry