உக்கிரமாகும் மக்கள் புரட்சி! பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் அறிவிப்பு!

0
204

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் இல்லத்தை நோக்கி வந்த மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு திடீரென வாபஸ் பெறப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

File Image

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Protestors demanding the resignation of Sri Lanka’s President Gotabaya Rajapaksa

பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டும்படி இலங்கை சபாநாயகர் மகிந்த அபேவர்தனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கோத்தபயா, பிரதமர் ரணிலிடம் உறுதியளித்ததாக தகவல் வெளியானது.

Also Read : போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை! உயிருக்கு பயந்து தப்பியோடிய கோத்தபய! போர்க்களமானது கொழும்பு!

அதேநேரத்தில், ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோத்தபயாவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்தனர். அதனை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைத்துக் கட்சி அரசு அமைவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனாவை இடைக்கால அதிபராக பதவியேற்கும்படி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் எனவும் தெரியவந்துள்ளது. எந்த நேரத்திலும் கோத்தபய பதவி விலகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. பதவி விலகும் கோரிக்கை பற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry