போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை! உயிருக்கு பயந்து தப்பியோடிய கோத்தபய! போர்க்களமானது கொழும்பு!

0
348

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த எம்.பி. ரஜிதா சேனரத்னாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

போராட்டக்காரர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோத்தபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார்.

கோத்தபய ராஜபக்ச

முன்னதாக கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்ததால் நேற்று காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு அமல்படுத்தியது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை இன்று முற்றுகையிட்டனர். ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், மக்கள் அதனை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை சூறையாடப்படுவதாகவும், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதும் எரிபொருளுக்காக பல நாட்கள் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோத்தபய ராஜபக்சவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் நாட்டினை படுபாதாளத்தில் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் கோத்தபயவின் அலுவலகத்தை சூறையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry