நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! போலீஸ் இல்லாததால் கூச்சல் குழப்பம்! வெயிலில் தவித்த வாகன ஓட்டிகள்!

0
247

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, கடந்த 3-ஆம் தேதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக திமுக நிர்வாகிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளையும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினார்கள். காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பகுதியில் திமுக நிர்வாகி சாட்சி சண்முகசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திமுக எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை துவக்கி வைத்து விட்டு சென்றனர். மேடை அருகே இருந்த கட்டுக்கடங்காத கூட்டம் உதவிப் பொருட்களை பெற முண்டியடித்தது. இதன் காரணமாக பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ஒருகட்டத்தில் கூட்டம் மேடை மீது ஏறி உதவிப்பையை எடுத்துச் செல்ல முற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி சாட்சி சண்முகசுந்தரம், பெண்கள், ஆண்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் முட்டித் தள்ளி அகற்றினார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்தை சரிசெய்யவும் போலீஸார் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry