அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை மூட முடிவு! ஏழை, அடித்தட்டு பெற்றோர் பாதிப்பு!

0
273

ஏழை அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கிடும் வகையில், முந்தைய அதிமுக அரசு 2019-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளான LKG, UKG வகுப்புகளை தொடங்கியது. 2019-2020ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் 2381 அங்கன்வாடிகளில் கல்வி கற்று வந்த சுமார் 53 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக LKG, UKG வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். பிஞ்சு குழந்தைகளுக்கு கல்வி போதிக்க இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள், காலணி வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனவே அங்கன்வாடி மையங்களை அதிகரித்து LKG, UKG வகுப்புகளில் அதிக அளவில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது. பள்ளிக் கல்வித்துறை இதை மறுத்தாலும், மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமலே இருந்தது. இதனால் ஏழை, அடித்தட்டு பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, தற்போது பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கே அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.

இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி, மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry