சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக்காட்டி தீட்சிதர்கள் எதிர்ப்பு! ஆய்வு நடத்த முடியாமல் அரசு ஏமாற்றம்!

0
247

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதிகாரிகள் குழு நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு மற்றும் நகைகள் உள்ளிட்ட கோயிலின் சொத்துக்களை ஆய்வு செய்ய இருப்பதாக, இந்துசமய அறநிலையத் துறையில் இருந்து கோயிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பினார். ஆனால் அறிநிலையத்துறையில் இருந்து இதற்கு பதில் எழுதவில்லை.

இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் பொது தீட்சிதர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது ஆய்வுக்கு ஒத்துழைப்பு தருமாறு தீட்சிதர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை (ஜூன் 7) இந்துசமய அறநிலையத்துறை வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில், இணை ஆணையர்கள் பழனி நடராஜன், வேலூர் லக்ஷ்மணன், கடலூர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையரும் ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் தீட்சிதர்கள் அதிகாரிகள் குழுவை தேவ சபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் தீட்சிதர்கள் ஒரு மனுவை அதிகாரிகளிடம் அளித்து, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களது மூதாதையர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நிர்வகித்து வருகின்றனர் என்று கூறி கணக்கு காட்ட மறுத்தனர்”.

தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். கோவிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். கோயிலில் 2009-ல் நடந்த கணக்கு தனிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை எனவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் சிதம்பரத்தில் தங்கியிருந்து உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று நாளை (ஜூன் 8) மீண்டும் கோயிலுக்கு ஆய்வுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry