யு டியூபர் நிதி மோசடி வழக்கு! வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை! கஸ்டடி எடுக்க போலீஸ் தீவிரம்!

0
329

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் ஒன்றில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இந்த சிலைகள் உடைப்பு தொடர்பாக மனநோயாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் கோவில் சிலைகளை மாற்று மதத்தினரே உடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டது. அத்துடன் பாஜக ஆதரவாளரான இளையபாரதம் எனும் தலைப்பில் யூடியூப் நடத்தி வந்த கார்த்திக் கோபிநாத், இணையம் மூலமாக இக்கோவில் சீரமைப்புக்கு நிதி திரட்டுவதாகவும் அறிவித்தார். சிறுவாச்சூர் கோவில் சீரமைப்புக்காக மொத்தம் ரூ34 லட்சம் நிதி திரட்டி இருக்கிறார் கார்த்திக் கோபிநாத். இதில் ரூ6 லட்சத்தை தமது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றியிருந்தார்.
மேலும் இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் கோவில் சீரமைப்புக்கு கார்த்திக் கோபிநாத் நிதி வசூல் செய்து மோசடி செய்ததாகவும் சென்னை ஆவடி போலீசில் புகார் கூறப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர்.

இதனையடுத்து நீதிபதி முன் கார்த்திக் கோபிநாத் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கார்த்திக் கோபிநாத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, கார்த்திக் கோபிநாத்தின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பாஜக தலைவர்கள் குறித்து கேள்வி கேட்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் கோபிநாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் வசூலிக்க கார்த்திக் கோபிநாத் 2 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், மோசடிக்கு அந்த வங்கி கணக்குகளை அவர் பயன்படுத்தி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடிக்கு அந்த வங்கி கணக்குகளை அவர் உபயோகித்தது உறுதியானதை தொடர்ந்து, அவற்றை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர். மேலும் கார்த்திக் கோபிநாத்தின் செல்போனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. செயலி மூலம் பணம் வசூலித்தது தொடர்பாக போலீஸார் ஆய்வு செய்ய உள்ளனர்.

கார்த்திக் கோபிநாத்தின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry