Monday, January 24, 2022

கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீஸ் அவுட்போஸ்ட்! சிக்னல்களில் பசுமைப் பந்தல்! சட்டமன்றத்தில் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

கஞ்சா விற்பனை உள்ளிட்ட  குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, போலீஸ் அவுட் போஸ்ட் நிறுவ வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்திய முதலியார்பேட்டை திமுக எம்.எல்.. சம்பத், சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்குமாறும் கோரியுள்ளார்.

உள்ளாட்சித்துறை

சட்டமன்றத்தில் பேசிய அவர், “துப்புரவுப் பணிகளை கண்காணிக்க ஏதுவாக, துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் விவரங்களை தொகுதி எம்.எல்..க்களிடம் வழங்க வேண்டும். முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், உப்பளம் தொகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில், முதலியார்பேட்டை இடுகாட்டில் மின் தகன மேடை அமைக்க வேண்டும்.

தெருநாய்களை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்யாமல் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  புதுச்சேரி நகராட்சி சுகாதாரப் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், சிறப்பாக பணியாற்றும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரப்பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

உள்துறை

கொரோனா வரி என்ற பெயரில் 100 ரூபாய், 200 ரூபாய் கட்டாய வசூல் செய்ய காவல்துறையை நிர்பந்திப்பது, போலீஸார் மக்களுக்கு வெறுப்புணர்வை தூண்டுவதுடன், அவர்கள் செய்த தியாகம் மறக்கடிக்கப்படுகிறது. எனவே கொரோனா வசூல் செய்ய காவல்துறையை நிர்ப்பந்திக்கக் கூடாது.

கடற்கரையில், பார்க் ஹோட்டல் அருகே தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ள போலீஸ் அவுட் போஸ்ட்டை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முதலியார்பேட்டை காவல் நிலையத்தில், காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். முதலியார் பேட்டை காவல் நிலையத்தில், கிரைம் பிரிவில் தொடர்ந்து 7 முதல் 8 ஆண்டுகளாக காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆள் பற்றாக்குறையும் உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனை உள்ளிட்ட  குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, நான்கு இடங்களில் அவுட் போஸ்ட் கேட்டிருந்தோம். அதை உடனடியாக அமைத்துத் தரவேண்டும்.

பொதுப்பணித்துறை

கடலூர் மார்க்கமாக புதுவையின் நுழைவு வாயிலாக இருக்கும் முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் 5 சாலைகள் இணைக்கப்படுகின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்னையில் கிண்டி கத்திபாரா சந்திப்பில் உள்ளது போன்ற மேம்பாலத்தை கட்ட வேண்டும்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலுள்ள அனைத்து வாய்க்கால்களும் தூர்வார வேண்டும். நைனார் மண்டபம் கோயில் அருகே எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே கோயிலுக்கு எதிரே உள்ள இடத்தை (worth society) சிறிதளவு கையகப்படுத்தி அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

புதுச்சேரி கடலூர் பிரதான சாலையான AFT மில் அருகே ரயில் கடக்கும் போது, கேட் திறப்பதற்கு  அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துசமய அறிநிலையத்துறை, கல்வித்துறை

முதலியார்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட துலுக்கானத்தம்மன் ஆலயத்துக்கு, இதே தொகுதியைச் சேர்ந்தவர்களையே அறங்கவாலர்களாக நியமிக்க வேண்டும்.  நைனார் மண்டபம். வேல்ராம்பட்டு ஆகிய பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். அரசுப் பள்ளியில், சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான பிரேக் முறையை ரத்து செய்து, அவர்களுக்கு அனைத்து மாதங்களும் சம்பளம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

போக்குவரத்துத்துறை

மரப்பாலம் சந்திப்பு முதல் புதிய பேருந்து நிலையம் வரை, சிமெண்ட் ரோடு வழியாக பேருந்து இயக்குமாறு நான் விடுத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி. புதுவையில் இயங்கும் அனைத்து பேருந்துகளுக்கும் தற்போதுள்ள டைமிங்கானது 1988 முதல் 1992 ஆம் நிர்ணயிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதையை தேவை மற்றும் வாகன நெரிசலுக்கு ஏற்ப நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

நீதித்துறை

வழக்கறிஞர் சேமநலநிதி தொடர்பாக பல காலங்களாக புதுச்சேரி வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் சங்கமும் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான சரியானதொரு சட்ட வரைவு இல்லாத காரணத்தால், இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கிறது. Pondicherry Advocate Welfare Fund Scheme என்ற ஸ்கீம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. அதற்கு கார்ப்பஸ் பண்ட் என்று ஒரு கணிசமான தொகையை உருவாக்கி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நமது மாநிலத்துக்கான அரசு வழக்கறிஞர் பதவிகளை புதுச்சேரியை சார்ந்தவர்களை கொண்டுதான் நிரப்ப வேண்டும். இதைச் செய்யாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது மாநிலத்திற்கு  கிடைக்கவேண்டிய நீதியரசர் பதவியானது தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சென்று விட்டது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். புதுச்சேரி நீதிமன்றத்தில், ஒரு ரூபாய் மற்றும் 2 ரூபாய் ஸ்டாம்ப் உட்பட அனைத்து குறைந்த விலை ஸ்டாம்ப் தட்டுப்பாட்டை போக்க வழிவகை வேண்டும். நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சுகாதாரம், மின்சாரம், விளையாட்டுத்துறை

முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தருவதுடன், ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும். கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆஷா பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். எல்இடி பல்புகள் மற்றும் ட்யூப் லைட்டுகளை அனைத்து தொகுதிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டாயம் ஒதுக்க வேண்டும். தெருவிளக்குகளுக்கான TIMERகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும்.

புதுச்சேரி மாநில விளையாட்டு குழுமத்தை தனித் துறையாக மாற்றிட ஆவன செய்ய வேண்டும். கடந்த 2010 முதல் பதிவு பெற்ற விளையாட்டு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய Participation grant மற்றும் Grant in aid ஆகியவை வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 2020 தேதியிட்ட ஆணையில் குறிப்பிட்டுள்ள 20 விளையாட்டுகளுக்கு, படிவம் 2 வழங்கப்படுவதில்லை. இது கிடைக்கப் பெற்றால், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும். புதுவை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறும்போது நமது அரசும் சார்பாக சீருடை மற்றும் காலனி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிமைப்பொருள் வழங்கல் துறை

குடிமை பொருள் வழங்கல் துறையில், சிகப்பு அட்டை கொடுக்கப்படும் மருத்துவ காப்பீட்டை, மஞ்சள் அட்டை கொடுத்து விட்டாலே சிகப்பு அட்டை மீது உள்ள மோகம் குறைந்து விடும். மேலும் சிகப்பு அட்டைதாரர்களுக்கு வங்கியில் லோன் கொடுப்பது இல்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஜங்ஷன் மேம்பாடு மூலம், அனைத்து சிக்னல்களிலும் நிழல் தரும் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் வருவாயைப் பெருக்க யோசனை

RERA பிரச்சனையால் முடங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்களை நீக்கி, பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை பத்திர பதிவின் மூலம் வருவாய் கிடைக்கும். இதன்படி பார்த்தால் சுமார் 15 முதல் 20 கோடி வரை வருமானம் கிடைக்கும். கட்டுமானப்பணிகள் நடைபெற்றால் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் வாயிலாக ஜிஎஸ்டி வருமானம் கிடைக்கும். கட்டிட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பொதுத்தேவை

முதலியார்பேட்டையில் இருந்த வானொலித்திடலை சிலர் அபகரித்துவிட்டனர். அதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட இடங்களில் இயங்கும் கிளை சாராயக்கடைகளை தடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசு புறம்போக்கு இடங்கள் பட்டா மாற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீண்டும் அரசு புறம்போக்காக மாற்ற வேண்டும்.

புதுச்சேரி நகரப்பகுதியில் RO தண்ணீரைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. RO இயந்திரத்தால் மூன்றில் ஒரு பங்கு நீர் வீணாகிறது. இப்படி வீணாகும் நீரை மீண்டும் நிலத்தடியில் கொண்டு சேர்க்க பிரத்யோக திட்டத்தை உருவாக்க வேண்டும். முதலியார்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட உழந்தை ஏரி மற்றும் முருங்கபாக்கம் ஏரியை ஆழப்படுத்தி, நீரைத் தேக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!