நாம் நினைக்கும் இடத்தில் வைத்து கும்பிடக்கூடிய சுதந்திரத்தை கொடுத்திருப்பவர் வேழமுகன். காட்சிக்கு எளியவராக இருந்தாலும், கருணை வழங்குவதில் கணபதி முதன்மையானவர். இவர் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளையே, விநாயகர் சதுர்த்தி என நாம் கொண்டாடுகிறோம்.
கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயமாக காணாபத்தியம் இருக்கிறது. கணபதி வழிபாடு, சைவ சமயத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் விநாயகரைப் பற்றி பாடியுள்ளனர். நண்ணிய சீர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நாணூறும் என்மனத்தே நல்கு என தில்லையில் கணபதிப் பெருமானைப் பார்த்து மாணிக்கவாசகர் பாடுகிறார். “ஐந்து கரத்தனை யானை முகத்தனை” எனத் தொடங்கும் பிரார்த்தனைப் பாடலோடுதான் திருமூலர் திருமந்திரத்தை எழுதினார். விநாயகப் பெருமானை சிறுவயதிலேயே பூசித்து அருள் ஞானம் பெற்றவர் நம்பியாண்டார் நம்பி.
பலரும் எழுதத் தொடங்கும்போது ‘உ’ என பிள்ளையாரை குறியிடுவது வழக்கம். ஆனால், இதன் பின்னணி பலருக்கும் தெரியாது. உலகெலாம் வாழ்க என்பதன் சுருக்கமே ‘உ’ குறியீடு என கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி பெரியபுராணப் பாடல்களில் விளக்கமாக உள்ளது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என தொடங்கும் பாடலோடு, அடுத்தடுத்த 2 பாடல்களைப் பார்த்தால், ‘உலகெலாம்’ என்ற சொல் தில்லை கூத்தப்பெருமான் அருளியது புலனாகிறது. அதனுடன் இணைத்தே ஐங்கரனை கருத்துள் இறுத்தி திருத்தொண்டர் புராணம் எழுதப்பட்டுள்ளது. எனவே ‘உ’ என்ற எழுத்தில், அம்பலத்தரசனின் வாக்கும், கணபதியின் காப்பும் அடங்கியிருப்பதாலேயே, அந்த எழுத்து பிள்ளையார் சுழி என அழைக்கப்படுகிறது.
அதேபோல் பேழைப் பெருவயிறானின் வாகனம் மூஞ்சூரா, பெருச்சாளியா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜ சோழன் அமைத்த பரிவாராலயத்து கணபதி முன்பு பெருச்சாளி உருவம் இருந்ததை, அந்த ஆலய கல்வெட்டில் ‘பெரிச்சாளி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பெருச்சாளியையே வேழமுகத்தானின் ஊர்தியாக நாம் கொள்வோம்.
தமிழகத்திலேயே மிகத் தொன்மையான கணபதி சிற்பம், பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் உள்ளதாகும்(வலம்புரி விநாயகர்). முற்காலப் பாண்டியர்களாஸ் சங்க காலத்தில், திருஈங்கைக்குடி கல் குன்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு சிவாலயத்தின் பரிவார தெய்வமாக தேசிவிநாயகர் எனப்பெறும் இப்பெருமான் குறிக்கப்பெறுகிறார். இந்தத் திருவுருவத்தை அமைத்த சிற்பியின் பெயர் ஈக்காட்டூர்கோன் பெருந்தச்சன். இது அங்குள்ள 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் உள்ளது.
பவுத்த சமயத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற இரு ஆண் கடவுள் உள்ளனர். அவர்கள் இந்திரனும், கணபதியும்தான். நேபாளத்தில் கணபதியை நர்த்தன விநாயகராகவும், கணேஷினி என பெண் வடிவிலும் வழிபடுகிறார்கள். பவுத்த சமயம் பரவிய நாடுகளில் எல்லாம் விநாயகர் அதிர்ஷ்ட தேவதையாக இன்றும் வணங்கப்படுகிறார். உலகிலுள்ள விலங்குகளிலேயே யானை மட்டும்தான் தன் மீது பயணம் செய்யும் பயணிக்காக குனிந்துகொடுக்கும். இப்படி உதவிக்கரம் நீட்டும் யானையின் முகத்துடன் விளங்கும் கரிவரதன், தன்னை நம்பியோருக்கு அருளும் அற்புத தெய்வமாக இருக்கிறார்.
பெரிய பெரிய ஆலயங்களில் கணபதி கன்னி மூலையில் அமர்ந்திருப்பார். ஆனால் இதைத்தாண்டி, ஒவ்வொரு தெருவிலும், சாலைகளிலும், ஏழை மக்களின் வசிப்பிடங்களிலும், ஆறு, குளம், ஏரிக் கரைகளிலும் வைத்து வழிபடப்படுபவர் வேழமுகத்தான். எந்த சிக்கலான வழிபாடுகளும் இவர் இடத்தில் இல்லை. ஏழைப்பங்களான இவர், தற்போது கிரிக்கெட் வீரர் தொடங்கி பல உருவங்களில் அருள்பாளிக்கிறார்.
தகவல் உதவி: முதுமுனைவர் ‘குடவாயில்’ பாலசுப்ரமணியன், ஆன்மிகம்
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry