கோத்தபய ராஜினாமா? காட்டு பங்களாவில் பதுக்கிய மகிந்த ராஜபக்சே!

0
273

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சேவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச் சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. இலங்கையில் இன்றும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடித்த மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அரசுக்கு எதிராக ஆவேசமடைந்த மக்கள் மகிந்தவின் பூர்விக இல்லம் உட்பட அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பி-க்களுக்குச் சொந்தமான வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தீ வைத்து வருகிறார்கள். வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சவிடம் இருந்து எந்த ஆலோசனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே எங்களின் ஒரே வலியுறுத்தலாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும்படி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று சஜித் பிரேமதாசா கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவச் சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் தங்கியிருப்பதாக தெரிகிறது. திரிகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில், கப்பல்துறை தளத்தில் உள்ள ‘பில்லோ ஹவுஸ்’ எனப்படும் காட்டு பங்களாவில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருப்பதாக உறுதியாகக் கூறப்படுகிறது.

கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் இந்த காட்டு பங்களா அமைந்துள்ளது. இதனைச் சுற்றி பல ரகசிய இடங்களும் உள்ளன. ‘பில்லோ ஹவுஸ்’ பாதுகாப்பான இடம் என்பதால் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. திரிகோணமலையில் இருந்து ஹெலிகாப்டரில் கட்டுநாயக்காவிற்கு வருவதாக மக்களைத் திசை திருப்பி விட்டு, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டு பங்களாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனூடே, இலங்கையில் உள்ள மக்கள் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டு மாரக்கமாக உள்ளே நுழைய வாய்ப்புள்ளதால் இந்திய கடற்படையினர் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய கடற்படையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், இலங்கையில் இருந்து சிங்களர்களும், தமிழர்களும் மட்டுமின்றி இலங்கை சிறைகளில் உள்ள கைதிகளும் தப்பித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டிற்குள் நுழையுக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகள் 24  மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், இலங்கைக்கு இந்திய ராணுவம் தனது படைகளை அனுப்புவதாகத் தகவல்கள் பரவின. இதையும் இந்தியா உறுதியாக மறுத்திருக்கிறது. இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதரகம், ‘இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில குறிப்பிட்ட ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஊக அடிப்படையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவல்களும் இது குறித்த கருத்துகளும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்குப் பொருத்தமானவை அல்ல’ என அதில் குறிப்பிட்டிருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry