அதிகார மோதலில் உதயநிதி – சபரீசன்! பி.கே-வுக்காக டம்மியாக்கப்பட்ட பிடிஆர் மகன்!

0
142

திமுக ஐ.டி. விங், பிரசாந்த் கிஷோர், கு.. செல்வம் போன்ற விவகாரங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது கட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என திமுக மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்கான வியூகங்களை வகுத்துத் தர, குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடுதான் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் ஐபேக் நிறுவனத்தை ஸ்டாலின் நியமித்தார். ஆனால், அந்த நிறுவனத்தின் செயல்பாடு திமுக சீனியர்கள், திமுக ஐ.டி.விங்கை அடித்துத் துவைக்கிறது.

ஐபேக் ஊழியர்கள் மரியாதை இல்லாமல் நடக்கிறார்கள் என மறைந்த எம்.எல்.. ஜெ. அன்பழகன் ஸ்டாலினிடம் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். அதேபோல், திமுக ஐ.டி. விங் பொறுப்பாளரும், சபரீசனின் நெருங்கிய உறவினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை, பிரசாந்த் கிஷோர் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. இதனால், சபரீசனுக்கு, பிரசாந்த் கிஷோர் மீது வருத்தம் ஏற்பட்டது. அதை, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடமும் அவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஐபேக் நிறுவனத்துக்காக அண்ணா அறிவாலயத்தில் கார்ப்போரேட் ஆஃபீஸ் தயாராகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், சபரீசனுக்கு மிக மிக நெருக்கமானவராக அறியப்படும் கார்த்தியிடம் (அண்ணா நகர் எம்.எல்.. மோகன் மகன்) அலுவலக உருவாக்கப் பணியை ஒப்படைத்திருக்கிறார் உதயநிதி. இதனால், கடும் அதிர்ச்சிக்குள்ளான சபரீசன்,  தம்முடைய மனக்குமுறல்களை ஸ்டாலினிடம் கொட்டியிருக்கிறார். ஆனால், உதயநிதி சொல்வதே நடக்கட்டும் என்ற ரீதியில் கிடைத்த பதிலால், அடுத்த கட்ட நவடிக்கை குறித்து பழனிவேல் தியாகராஜனுடன் சபரீசன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

அதேபோல், கு.. செல்வம் விவகாரத்திலும் சபரீசன் பரிந்துரை அடியோடு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கு.. செல்வம், ஸ்டாலின் குடும்பத்துக்கும், குறிப்பாக சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர். ஜெ. அன்பழகன் மறைவுக்குப் பிறகு, சிற்றரசுவை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்க கிச்சன் கேபினெட்டில் உதயநிதி பேசியிருக்கிறார். இதையறிந்த சபரீசன், சீனியர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களை தாண்டி சிற்றரசுவை நியமிப்பது சரியாக இருக்காது என ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். கு.. செல்வத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கலாம் என்றும் அவர் சொன்னதாக தெரிகிறது

ஆனால், உதயநிதி, அன்பில் மகேஷ் பரிந்துரைப்படி, சிற்றரசுவையே மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஸ்டாலின் அறிவித்தார். இது பற்றி கு.. செல்வம், சபரீசனை தொடர்பு கொண்டு கேட்டதாகத் தெரிகிறது. அவர் சொன்னபடி, ஸ்டாலினை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டபோது, தரப்படவில்லை. இதை கு.. செல்வம் சபரீசனுக்கு தெரியப்படுத்த, அவர், இனி, நீங்கள் விருப்பப்படி முடிவெடுங்கள் எனக் கூறியதுடன், இந்த விவகாரம் பற்றி டெல்லியில் சிலரிடம் பேசியதாகவும் தெரிகிறது. அதன்பிறகே தமிழக பா..க தலைவர் முருகன், கு.. செல்வத்தை தொடர்புகொண்டு டெல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்

கு.. செல்வத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தது சபரீசன்தான் என நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியானவுடன், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர், சிற்றரசு நியமனம் போன்றவற்றை மனதில் வைத்தே, சபரீசன் இவ்வாறு நடந்துகொண்டாரா என திமுக தலைமை குடும்ப வட்டாரங்களுக்கு உள்ளேயே விவாதம் நடக்கிறது.

கட்சியில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சபரீசன் செயல்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே கனிமொழி, அழகிரி ஆகியோர் உதயநிதிக்கு குடைச்சல் கொடுக்கும் நிலையில், சபரீசனை வளர விட்டால், அது மேலும் பிரச்னைதான். ஒரு எம்.எல்.வையே மாற்றுக் கட்சிக்கு அனுப்பும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பது நல்லதல்ல எனவும் திமுக தலைமைக்கு சிலர் எடுத்துரைத்துள்ளனர். அதன் விளைவுதான், பிரசாந்த் கிஷோருக்கு கூடுதல் முக்கியத்தும், பழனிவேல் தியாகராஜன் டம்மியாக்கப்படுவது, கு.. செல்வம் நீக்கப்பட்டது போன்றவை எல்லாம் என திமுகவில் உள்ள சிலரே கூறுகின்றனர்.

ஆனால், கு.. செல்வமும், சபரீசனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதை அடிப்படையாக வைத்து இதுபோன்ற தகவல்களை சிலர் பரப்புவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், நெருப்பில்லாமல் புகையாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.