கட்சி இப்போதைக்கு இல்லை! வாக்குகள் இருந்தால் பணம் ரெடி! பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

0
190

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸுக்கு என்னைவிட, கட்சித் தலைமையே முக்கியம்’ எனக் கூறி, காங்கிரஸின் பேச்சுவார்த்தையிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.

அடுத்த சில நாள்களிலேயே, “பிரச்னைகளை நன்றாகப் புரிந்துகொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களைச் சந்திக்கவிருக்கிறேன்” என டிவிட்டரில் அவர் பதிவிட்டிருந்தார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து புதிய அரசியல் கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கப்போகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர், “வரும் அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல், மேற்கு சம்பாரண், காந்தி ஆசிரமத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட பீகாரில் 3,000 கிலோமீ ட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு, முடிந்தவரை மக்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளேன். பீகாரில் உடனடியாகத் தேர்தல் இல்லை என்பதால், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், பொது நல்லாட்சி என்ற திட்டத்துடன் மக்களைச் சென்றடைய விரும்புகிறேன்.

பீகாருக்குக் கடந்த 15 வருடங்கள் சரியாக அமையவில்லை. இருப்பினும், இன்று நான் எந்த அரசியல் தளத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ அறிவிக்கப்போவதில்லை. மாறாக பீகாரில் மாற்றத்தை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைக்கவே விரும்புகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அது பிரசாந்த் கிஷோரின் கட்சியாக அல்லாமல் மக்கள் கட்சியாகவே இருக்கும்.

கடந்த சில மாதங்களில், பீகாரில் மாற்றத்தை விரும்பும் 17,000 பேரை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. அடுத்த 3, 4 மாதங்களில் முடிந்தவரை அவர்களைத் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திப்பேன்” என்று கூறினார். இந்தச் சந்திப்பில் நிதி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்யெழுப்பியபோது, எங்களிடம் வாக்குகள் இருந்தால், பணத்தை ஏற்பாடு செய்யலாம் என பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry