அக்கா குருவி திரை விமர்சனம்! உணர்வுப்பூர்வமாக நகரும் காட்சிகள்! ‘சாமியா’ இப்படி?

0
580

உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி, முற்றிலுமாக வேறுபட்டு, இரு குழந்தைகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தான் ‘அக்கா குருவி’. உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம் தான் இப்படம்.

ஒரிஜினல் படத்தின் கதைப்படி, ஏழ்மை நிலையில் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு (அண்ணன் – தங்கை) இடையே உள்ள பாசப்பிணைப்பும், ஒரு ஷூவை வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் எப்படி பள்ளிக்கு செல்கிறார்கள் என்பதையும் உணர்வுப்பூர்வமாக கொடுத்திருப்பார் மஜித் மஜிதி. அந்த கதையை அப்படியே எடுத்துக்கொண்டு, ஒரிஜினல் படத்தின் உணர்வுகள் குறையாமல், அதேசமயம் தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்களை செய்து மனதை உருக்கும் படமாக அக்கா குருவியை படைத்திருக்கிறார் சாமி. அவரது இந்த புதிய பயணம் தொடர வாழ்த்துவோம்.

இசைஞானி இளையராஜாவுடன் இயக்குநர் சாமி

ஷூவைப் பரிசாகப் பெறுவதற்காக ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் சிறுவன் நினைத்ததை அடைய முடியாமல் தவிக்க, பின்னாளில் என்னவாக மாறுகிறான் என்பதே அக்கா குருவி படத்தின் கதை. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவர்கள் மாஹினும், டாவியாவும் போட்டி போட்டு நடித்து மனதை கொள்ளை கொள்கிறார்கள். இவர்களை இனி நிறைய சினிமாக்களில் பார்க்கலாம். படத்திற்கு ஜீவனாய் இருந்து ஒலிக்கிறது இளையராஜாவின் பின்னணி இசை. பாசம், காதல், வெற்றி என படத்தின் அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்துள்ள ராஜா, பாடல்களிலும் இன்னிசை விருந்து படைத்திருக்கிறார்.

கொடைக்கானல் மலைப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு காட்சிகளை ஒளி ஓவியமாய் கண்களுக்குள் கடத்துகிறது உப்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு. காட்சிகளை உணர்வுப்பூர்வமாக தொகுத்திருக்கிறார் மணிகண்டன் சிவகுமார். இடைச்செருகலாக வரும் காதல் காட்சிகள் படத்துடன் ஒட்ட மறுத்து நெருடலாக இருக்கின்றன. அதேபோல் தேவையில்லாத இடங்களில் வரும் காமெடி காட்சிகளும் சிரிப்புக்கு பதில் வெறுப்பையே உருவாக்குகின்றன. சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் மனதை நெகிழச்செய்யும் பாசப் பறவையாகக் கொத்துகிறது ‘அக்கா குருவி’.

சத்யா, விமர்சகர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry