திமுக அரசு வணிகர் நலனை காக்கிறது – மு.க. ஸ்டாலின்! வணிகர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி!

0
260

திருச்சியில் வணிகர் விடியல் மாநாட்டில் முதவமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மாநாட்டில் உரையாற்றிய அவர், “வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளை செய்தது திமுக அரசு. வணிகர்கள் நலனை காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசு திமுக. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர்தான்.

கொரோனா எனும் நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கு நிதியுதவி வழங்கிய வணிகர்களை பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை நாம் தொடங்கி உள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம்.

அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டார்கள். வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வருவாய் காக்கப்படும். வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற வணிகர் சங்க விழாவில், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “தி.மு.க ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் கடையை திறந்தால் மாமூல் கேட்கின்றனர், அப்படி மாமூல் தராவிட்டால், அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றனர். கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லும் வணிகர்களை வழிப்பறி செய்கின்றனர். மூடியுள்ள கடைகளை துளையிட்டு கொள்ளை அடிக்கின்றனர்.

வண்டிக்கு எப்படி அச்சாணி முக்கியமோ அதைப்போல, மக்களுக்கு அச்சாணியாக விளங்கி வருபவர்கள் வணிகர்கள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொருத்துதான் அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. வணிகர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை செய்திகளை ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.’’ இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry