மாநிலத்தில் கூட்டாட்சி..! மாவட்டங்களில் சுயாட்சியா..? குழப்பத்தில் கல்வித்துறை! கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்!

0
1127

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அன்றாடம் அளித்துவரும் பேட்டிகள் தெளிந்த உள்ளத்திலிருந்து வரும் கருத்து பிரதிபலிப்பாக அமையவில்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சுட்டெரிக்கும் கத்தரி வெயில் ஆனாலும், திட்டமிட்டபடி 13ஆம் தேதி வரையில் பள்ளிகளும், தேர்வும் நடைபெறும் என்று அறிவித்திருந்தால் கூட பரவாயில்லை, ஆறுதல் அடைந்து இருப்பார்கள்; தேர்வு எழுதும்போது மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும், தேர்வு எழுதாத வேளைகளில் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வா. அண்ணாமலை

மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியில் வராதீர்கள்! என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். காலையில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டுக்குச் செல்வார்கள். மதியம் தேர்வு எழுத வருபவர்கள் மதிய வெயிலில் பள்ளிக்கு வருவார்கள். இந்த உத்தரவு மாணவர்களுக்கு எந்த வகையில் பயன்படும் என்று புரியவில்லையே?.. இது அண்ணாயிசம்…! அல்ல புரியாதயிசம்…தான்.

Also Read : உ.பி.யைத் தொடர்ந்து குஜராத் கல்வி மாடல்! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு ஆசிரியர்கள் கேள்வி?

பள்ளிக்கல்வி ஆணையரகம், தொடக்கக் கல்வி இயக்குநரகம் சேர்ந்து தேதி இல்லாத, கையொப்பம் இல்லாத, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தேர்வு எழுதாத வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, தேர்வு தேதியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிப்பார்கள் என்று; ஒரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 5 ஆம் தேதி தேர்வு ஆரம்பித்து 13ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இன்னொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 6 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இன்னொரு முதன்மை கல்வி அலுவலர் மே 16ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.. ஒருவர் மூன்றாம் பருவத்தேர்வு என்று அறிவித்துள்ளார். ஒருவர் ஆண்டு தேர்வு என்று அறிவித்துள்ளார். இன்னொருவர் பொதுத்தேர்வு என்று அறிவித்துள்ளார்.

காலையில் வரும் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுவார்கள். மதியம் வரும் மாணவர்கள் மதிய உணவு உண்டுவிட்டு தேர்வெழுதி செல்வார்கள். இதுதான் இதுவரையில் நடைமுறை. ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து எப்படி சமைப்பது? என்று, பல சத்துணவு மேலாளர்கள் 6 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சத்துணவு வழங்குவது பற்றி முடிவெடுத்து தெரியப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

Also Read : கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு! முதலமைச்சர் கவனம் செலுத்த சங்கங்கள் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கல்வித் துறை தொடங்கிய காலத்திலிருந்து பள்ளிக்கல்வித்துறையில் ஒரே மாதிரியாக தேர்வு தேதியை அறிவிப்பார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரும்பிய தேதியில் தேர்வினை நடத்திக் கொள்ளலாம் என்ற சுயாட்சி அதிகாரம் தந்து அறிவிப்பு வழங்கியது, இந்திய நாடே உற்று நோக்குகிற ஆட்சி நடத்திவரும் மு.கஸ்டாலின் ஆட்சிக் காலத்தில்தான் என்பதை மறுக்க முடியவில்லையே? பள்ளிக் கல்வித்துறையில் இந்த வரலாற்றுப் பிழை நடைபெற்றுள்ளது என்பதை வேதனை உணர்வுடன் வெளிப்படுத்துகிறோம்.

பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் பதவிகள் சுதந்திரமாக செயல்பட்டபோது, தமிழ்நாடு முழுவதும் ஒரே தேதியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் உருவான பிறகுதான் இத்தனை குழப்பங்கள், முரண்பாடுகள் இருப்பதை கண்டு வேதனையுறாமல் இருக்க முடியவில்லை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில்தான் துறை நிர்வாகம் அமைந்து வந்ததாக இதுவரையில் சரித்திரம் அமைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்ற ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை, ஆசிரியர் சமுதாயம் வெந்து நொந்து முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் குரலோ, பதிவுகளோ முதலமைச்சருக்கு இன்னமும் எட்டப்படவில்லையே? என வியப்பில் ஆழ்ந்து வருகிறோம்.

“தந்தையோடு கல்வி போகும்” என்பார்கள்; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் ஆகியோர் காலத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித்துறைக்கு இதுபோன்ற சோதனை வரும் என்று எங்கள் கனவில் கூட நாங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை.” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry