கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?

0
251
கிணத்துக்கடவு அருகே அதிக ஆழமாக தோண்டப்பட்டு இயங்கிவரும் கல் குவாரி | Image Courtesy - Indhu Thamizh Thisai

கோவை மாவட்டத்தில் இருந்து தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை தடுக்க தமிழக அரசே குவாரிகளை ஏற்று நடத்த வேண்டு என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கல், ஜல்லி, மண், எம்-சேண்ட், கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கிணத்துக்கடவு, செட்டிப்பாளையம், சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சமீபகாலமாக இத்தகைய செயல்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு பல ஆயிரம் அடி பள்ளம் தோண்டப்பட்டு கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

கனிமக் கொள்ளையில் முதல்வர் குடும்பத்துக்கு தொடர்பு? பகீர் கிளப்பும் S.P. Velumani | ADMK TODAY

கனிமவளக் கொள்ளை குறித்து கருத்து தெரிவித்துள்ள மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், “எந்த பகுதியில் கனிம வளங்கள் தேவைப்படுகிறதோ அவை சுற்றுப்புற பகுதிகளில் இருந்துதான் எடுத்து பயன்படுத்தப்படுவது வழக்கம். இதனால் நீண்ட நாட்களுக்கு கனிம வளங்கள் பயன்படும். தவிர சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

ஆனால் கோவை மாவட்டத்தில் முறைகேடாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள், கேரள மாநிலத்தின் மொத்த தேவைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் கோவை மாவட்டத்தில் கனிம வளம் கிடைக்காத அவல நிலை ஏற்படும். விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலத்தடி நீர் கல்லுக்குழிகளுக்குள் தேங்கி வீணாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், விவசாய நிலத்தின் பரப்பளவு கணிசமாக குறைந்து விடும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேரள அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பது போல, தமிழக அரசும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒவ்வொரு லாரியிலும் குறைந்த பட்சம் 15 யூனிட் கனிம வளம் ஏற்றி செல்லப்படுகிறது. ஒரு லாரிக்கு ரூ.5,000 முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.

Also Read : பாலைவனமாகும் தமிழ்நாடு? திட்டமிட்டு நசுக்கப்படும் வேளாண்மை! கனிமங்கள் கடத்தலைத் தடுப்பதில் அக்கறையின்மை!

தினமும் எத்தனை ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு முறைகேடாக வசூலிக்கப்படும் தொகை அரசுக்கு செல்லாமல் குறிப்பிட்ட சில மாஃபியா கும்பலுக்கு தான் செல்கிறது. ஒருவர் தனது தோட்டத்தில் கிராவல் மண் எடுத்தால்கூட ஒரு யூனிட்டுக்கு ரூ.500 செலுத்தினால் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி கிடைக்கும். மீறி செயல்பட்டால் லாரி பறிமுதல் செய்யப்படும். லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாத அளவுக்கு நடைபெறுகின்றன.

மக்களுக்கு தெரிந்தாலும் பயம் காரணமாக எதிர்த்து பேச முடியாத அவல நிலை உள்ளது. அரசே குவாரிகளை ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும். எங்கள் இயக்கம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டால் தருவதில்லை. எனவே, நீதிமன்றத்தை நாட உள்ளோம். மக்களுடன் இணைந்து கனிம வள கொள்ளையை தடுக்க தொடர்ந்து போராடுவோம்.” இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.

Recommended Video

2 மாவட்டங்களில் இருந்து மட்டும் மாதத்துக்கு ரூ.100 கோடி வசூல்! Mining Scam | Sella Rajamani Exclusive Interview

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறும்போது, ‘‘கனிம வளங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். மற்ற மாநிலங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. தமிழகத்தின் தேவைக்கு மட்டுமே கனிம வளங்களை எடுக்க வேண்டும். முறைகேடுகளை முற்றிலும் தடுக்க அரசே ஏற்று நடத்த வேண்டும். பணி ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகள், கட்சி சார்பற்ற விவசாயிகள், நேர்மையான சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு கமிட்டி அமைக்க வேண்டும்’’என்றார்.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், “கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மாவட்டம். இந்த மண்ணின் இயற்கை வளங்களை அழிப்பது, எதிர்கால சந்ததிக்கு நாமே வைக்கிற கொள்ளி. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் கோவையிலுள்ள அனைத்து நீர் வழித்தடங்களும் அழிக்கப்பட்டுவிடும். படிப்படியாக விவசாயமும் அழியும். கோவை மாவட்டமே பாலைவனமாகி விடும். கனிமவள கொள்ளையைத் தடுக்கக் கோரி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்” என்றார்.

Also Read : புதிதாக 25 மணல் குவாரிகள் திறப்பு! பொக்லைன் மூலம் மணல் அள்ள அனுமதி! தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது: கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் நெம்பர் 10 முத்தூர், பொட்டையாண்டிபுரம்பு, வீரப்பகவுண்டனூர், சொக்கனூர், நாயக்கனூர், வடபுதூர், கல்லாபுரம், சட்டக்கல் புதூர், புரவி பாளையம், வழுக்குப்பாறை, பெரும்பதி, செட்டிபாளையம், காரச்சேரி, தேகானி, கோதவாடி, அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் அனுமதி காலம் முடிந்தும் பல்வேறு கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

சிறு மலைகள் சிதைக்கப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டதால் வன விலங்குகளின் வாழிடம் பறிக்கப்பட்டு, அவைகள் அழிந்து வருகின்றன. குவாரிகளின் பயங்கர வெடிச்சத்தம் சிறு மலைகளில் வசித்து வந்த பறவைகளின் இனப்பெருக்கத்தை தடுத்து வருகிறது. குவாரியை சுற்றி கம்பி வேலி அமைத்தல், உரிம காலம், நடைச் சீட்டு அனுமதி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். குவாரியின் எல்லையில் வண்ணம் பூசப்பட்ட எல்லைக் கல் அமைக்க வேண்டும்.

குவாரிபுலத்தில் இருந்து பொது வண்டி தடத்துக்கு 10 மீட்டர் இடைவெளி விட வேண்டும். கல் குவாரிக்கு என தனி பாதைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ரயில் பாதை, உயர் மின் கோபுரம், உயர் மின் அழுத்த பகுதிகளில் இருந்து கல் குவாரிகளுக்கு 500 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பன உட்பட கனிம வளத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் கல்குவாரி நிர்வாகங்களால் சரிவர பின்பற்றப் படுவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

News Courtesy – Indhu Thamizh Thisai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry