அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பாசுமதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.
உலக அளவில் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 40 சதவீதம் அரிசி இந்தியாவிலிருந்தே உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. பாசுமதி அல்லாத அரிசி, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியில் சுமார் 25 சதவீதம் மட்டுமே பாசுமதி அரிசியாகும். எஞ்சிய 75 சதவீதம், வழக்கமான அரிசி எனும் நிலையில், மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்தது. கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிகளும் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது, அரிசிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதனை தட்டுப்பாட்டுக்கான அறிகுறியாக வியாபாரிகள் கருதுகிறார்கள். ரேஷனில் இலவச அரசி கொடுப்பதற்காக வெளிச் சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே, பல்வேறு மாநில அரசுகள் கொள்முதல் செய்கின்றன. இதனால், வெளிச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கிறது.
இதுஒரு புறமிருக்க, வட மாநிலங்களில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதித்திருக்கிறது. அரிசி மட்டுமல்லாமல் தக்காளி போன்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இது உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாகும். மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை கண்காணித்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்கறிகளின் விலை உயர்வைத் தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் வியாபாரிகள் மீண்டும் குறைப்பது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
Also Read : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவை உபயோகிப்பதில்லை! தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம்!
இதனூடாக, பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலை அதிகரித்து சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. 26 கிலோ சிப்பம், ஆயிரத்து 200 ஆக இருந்த இரண்டாம் தர அரிசி, ஆயிரத்து 400 ரூபாயாகவும், இட்லி அரிசி 850 ரூபாயிலிருந்து 950 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மூட்டை அரிசி 250 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது.
ஆனால், அரிசி தட்டுப்பாடு குறித்தோ, விலை உயர்வு குறித்தோ நுகர்வோர் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என வணிகர்கள் கூறுகின்றனர். “மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் டன் அரிசியை ஒதுக்கீடு செய்கிறது. இது தவிர மாநிலத்தில் விளையும் அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமிக்கப்படும் அரிசி ஆகியவையும் உள்ளன. ஆகவே, தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வு தற்காலிகமானது. இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்தியா முழுவதுமே 11 சதவீதம் அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக, கடந்த ஆண்டில் நெல் உற்பத்தி 14 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. அதனால், 2022ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்தே அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பண வீக்க விகிதம் 4.25ஆக இருந்தாலும்கூட, அரிசி விலை உயர்வு சுமார் 11 சதவீதம் அளவுக்கு இருந்தது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry