காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பொம்மை முதல்வர் தவறிவிட்டார்! கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக குற்றச்சாட்டு!

0
38
AIADMK leaders and functionaries staged a state wide demonstration | Image Credit - நக்கீரன்

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

Also Read : காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு மெத்தனம்! கருகும் அபாயத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள்! வேதனையில் டெல்டா விவசாயிகள்!

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், வேளச்சேரி எம்.கே. அசோக், விருகை ரவி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில், காய்கறி விலை உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

‘காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டிக்கிறோம். இவை அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டிக்கிறோம்’ என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், “மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை புரட்சித் தலைவி அம்மாவின் அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.

விழுப்புரத்தில் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அதிமுக ஆர்ப்பாட்டம்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை விடியா திமுக அரசு கட்டுப்படுத்தத் தவறியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டிக்கிறோம். மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்று அவர்கள் பேசினார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry