காவிரி நீர் விவகாரத்தில் துரைமுருகன் நாடகம் நடத்துகிறார்! விவசாயிகளை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என எச்சரிக்கை!

0
83
Farmers Union P.R.Pandian | Minister Durai Murugan

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடிப் பணிகள் தொடர்கின்றது.

3.50 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் பல இடங்களில் முளைப்பதற்குக் கூட தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. சில இடங்களில் தண்ணீர் பாய்ந்து உரம் இடுவதற்கு வழியில்லாமல் கருகத் தொடங்கி இருக்கிறது. இழப்பிற்கு முழுப் பொறுப்பேற்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ள நிலையில், நமக்கு ஜூன், ஜூலை மாதத்திற்குத் தர வேண்டிய 43 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடக மறுத்துவருகிறது. ஜூன் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய 9.1 டிஎம்சி நீரை தருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தராமல் கர்நாடகம் ஏமாற்றி விட்டது. தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் மௌனம் காத்து வருகிறது.

Also Read : காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு மெத்தனம்! கருகும் அபாயத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள்! வேதனையில் டெல்டா விவசாயிகள்!

இந்நிலையில் அழியும் பயிரைக் காப்பாற்றுவதற்கு தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்திருப்பது திட்டமிட்ட நாடகமாகும். இந்தச் சந்திப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணாக உள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாகக் கூட்டி தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆணையத்திற்குத் தேவையான உதவிகளை செய்து கர்நாடகாவிடம் மத்திய அரசு தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு செயல்பட மத்திய அரசும், கர்நாடக அரசும் மறுக்குமேயானால், தமிழ்நாடு அரசு, ஆணையம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்து தீர்வு காண முன்வர வேண்டும். அதைவிடுத்து மத்திய அமைச்சரை சந்திப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்காது.

மத்திய அமைச்சரை சந்தித்து ஆணையத்திற்கு வலியுறுத்தக் கேட்டு கடிதம் கொடுத்திருப்பது, நாம் பெற்ற உரிமையை, மீண்டும் மத்திய அரசிடம் பறி கொடுப்பது போல் அமைந்துள்ளது. இது முற்றிலும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முரணாக உள்ளது. இது தமிழ்நாட்டிற்குப் பாதகத்தை உருவாக்கும்.

Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

காவிரி நீரை தமிழகத்திற்குப் பெற்று தருவதற்கு மத்திய அரசாங்கங்கள் மாறி மாறி அரசியல் செய்ததால்தான் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது என்பதை முதலமைச்சருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். எனவே மீண்டும் மீண்டும் மத்திய அரசின் தலையில் சுமத்தி விட்டு காவிரி டெல்டா விவசாயிகளை பரிதவிக்க விடுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

இது குறித்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைவாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தைக் கூட்டி விரைவாக தண்ணீரைப் பெற்று, கருகும் பயிரை காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தில் டெல்டா விவசாயிகள் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன்.

மூன்றாவதாக ஆண்டாக தொடர்ந்து குறுவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதால், ஒட்டுமொத்த விவசாயிகளும் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான முழுப் பொறுப்பை தமிழ்நாடு அரசு ஏற்று, பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.” இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry