கட்டணக் கொள்ளை என வதந்தி! நிதி நெருக்கடியால் தவிக்கும் தனியார் பள்ளிகள்! தினக்கூலியாக மாறிய ஆசிரியர்கள்!

0
32

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதாக பெரு ஊடகங்கள் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துள்ளன. ஆனால், கள நிலவரம் இதற்கு நேர்மாறாக உள்ளது. வயிற்றுப் பிழைப்புக்காக ஆசிரியர்கள் கிடைக்கும் வேலையைச் செய்கின்றனர்.   

ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பம்

அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே நடத்தி வருகிறது. இருப்பினும்  பள்ளிச் சீருடை, வாகனக் கட்டணம், சிறப்புக் கட்டணம், பாடப் புத்தகக் கட்டணம் என்று அனைத்தையும் சேர்த்து, முழு கட்டணத்தையும் செலுத்துமாறு நிர்வாகத்தால் பெற்றோர் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கட்டணம் செலுத்தாவிட்டால், ஆன்லைன் வகுப்பில் இருந்து சம்மந்தப்பட்ட மாணவர்களை துண்டித்து விடுகிறார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75%-ஐ மட்டுமே, பெருந்தொற்று காலத்தில் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, எந்தத் தனியார் பள்ளிகளும் பின்பற்றவில்லை. அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்இப்படியான செய்திகள்தான் மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

தனியார் பள்ளிகள் கட்டண வசூல் பற்றிய இந்தச் செய்தியில், 80%க்கும் மேல் உண்மை இல்லை என்பதையே களநிலவரம் காட்டுகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள பிரபல பள்ளிகள் மட்டுமே முழுக் கட்டணமும் வசூலிப்பதாகத் தெரிகிறது. அதுபோன்ற பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை தாங்கும் திறனுள்ள பெற்றோர்தான், தங்களது பிள்ளைகளை அங்கு சேர்த்துள்ளனர். இதுபோன்ற பெற்றோரின் குரல்களையே, பெரு ஊடகங்கள்கட்டணக் கொள்ளைஎன்ற பதத்தைப் பயன்படுத்தி செய்தி வெளியிடுகின்றன.

ஆனால், நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. இங்குள்ள சில பள்ளிகள் மட்டுமே, பெருந்தொற்றுக்கு முன்னதாகவேகூட கறாராக கட்டணம் வசூலிக்கும் அல்லது வசூலிக்க முடியும். 90% பள்ளிகளில் பல லட்சங்கள் அளவுக்கு கட்டண பாக்கி இருந்துகொண்டேதான் இருக்கும். பயிர் அறுவடை சமயங்களில்தான், தவணைகளில் கட்டணம் வசூலாகும்.

நிர்வாகிகளை இறுக்கும் நிதி நெருக்கடி

பெருந்தொற்று ஊரடங்குக்குப் பிறகாக, நீதிமன்றம் நிர்ணயித்துள்ள 75% கட்டணத்தை செலுத்தக்கூட பெற்றோர் தயாராக இல்லை. 30-40% பெற்றோர் மட்டுமே, கட்டணத்தை தவணைகளில் செலுத்துகின்றனர். 1 – 8-ம் வகுப்பு வரை TC இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற தகவலைத் தொடர்ந்து, கட்டண பாக்கியை செலுத்தாமல், பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதேபோல், 1-8ம் வகுப்புவரைஆல்பாஸ்என்ற அரசு உத்தரவும், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மனநிலைக்கு பெற்றோரை இட்டுச்செல்லவில்லை

உதாரணமாக 100 பேர் படிக்கும் ஒரு வகுப்பில், வழக்கமான கட்டணம் ரூ.20,000 என்றால், தற்போது ரூ.15,000 மட்டுமே வசூலிக்க வேண்டும். இவர்களில் 25-30 பேர் மட்டுமே முழுக்கட்டணத்தையும் செலுத்துவார்கள். 60 பேர் சிறு தொகையை செலுத்துவார்கள். 10 பேர் கட்டணம் செலுத்தவே மாட்டார்கள். ஆனால், கட்டணம் செலுத்திய, செலுத்தாத அனைவருமே தேர்ச்சியாவார்கள். கட்டணமே செலுத்தாமல் தேர்ச்சிபெற்ற 10 மாணவர்கள், மற்ற மாணவர்களிடம் இதை சொல்லும்போது, நிர்வாகம் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் நிதி மற்றும் உளவியல் ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

நிர்க்கதியாய் தவிக்கும் ஆசிரியர்கள்

தற்போது நிலுவையில் இருக்கும் கட்டண பாக்கியை பள்ளி நிர்வாகங்களால் வசூலிக்கவே முடியாது. கட்டணம் வசூலாகவில்லை என்றாலும், மேல் வகுப்புகளுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சமாளிக்க முடிந்த பள்ளிகள் மட்டுமே ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் பாதியை வழங்கி வந்தன. இயலாத நிர்வாகங்கள், ஒன்றிரண்டு ஆசிரியர்/ஆசிரியைகளைத் தவிர்த்து எஞ்சியவர்களை தற்காலிகமாக விலக்கி வைத்துள்ளன.

தனியார் பள்ளிகளில் குறைவான ஊதியம் என்றாலும், மனநிறைவுடன் ஆசிரியராகப் பணியாற்றி வந்த பலரது நிலை தற்போது வேதனை தருவதாக உள்ளது. ஊதியத்தை அடிப்படையாக வைத்து, அவர்கள் வங்கியில் அல்லது தனிநபர்களிடம் வாங்கியிருந்த கடன், வாகனக் கடன், வீட்டு வாடகை, சாப்பாடு மற்றும் அத்தியாவசியச் செலவுக்கு பணமின்றி அவர்கள் தவிக்கிறார்கள்.  முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கூட முறுக்கு விற்கிறார்கள், பல ஆசிரியர்கள் தினக் கூலி வேலைக்கு செல்கிறார்கள். பலர் இருச்சகர வாகனங்களில் காய்கனி விற்கிறார்கள். அவர்களது எதிர்காலம் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் மற்றும் வாரிசுகளின் எதிர்காலத்தையும் சூழல் சிதைத்துள்ளது.

அரசு என்ன செய்யலாம்?

TC இருந்தால்தான் மற்ற பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற நடைமுறை இருக்கும் நிலையில், அதை மீறி, EMIS Number, Aadhar Number அடிப்படையில் TC இல்லாமல் மாணவர்கள் சேர்க்கப்படுவதைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து தனியார் பள்ளிகளால் ஓரளவு மீள முடியும். இதன் மூலம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் கிடைக்கும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது மகிழ்வைத் தந்தாலும், அரசு அங்கீகரித்த தனியார் பள்ளிகளை நிலைகுலைய வைப்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், பலர் பள்ளியை மூடி வருகின்றனர். மேலும் பலர் பள்ளியை விற்றுவிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி, தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமா? என தனியார் பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry