புதுச்சேரியில், பாகப்பிரிவினை தகராறில், போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு போலீஸாரே காரணம் என பாஜக எம்.எல்.ஏ. மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனூடே, பங்கு பிரிப்பது தொடர்பாக அண்ணன், தம்பி இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு, காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
தற்போது மீண்டும் பிரச்சனை எழுந்த நிலையில், அண்ணன் தம்பி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, தம்பி தாக்கியதில் அண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரின் பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், அண்ணனை தாக்கிய தம்பி, அவரது மனைவி, மாமியார் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் எடுக்காத நிலையில், அண்ணன் – தம்பி பாகப்பிரிவினை வழக்கு என்பதால், இருதரப்பும் பேசி சமாதானம் செய்துகொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்ட தம்பியை போலீஸ் கைது செய்யவும் இல்லை. சமாதானம் ஆகிவிட்டால், வழக்கை முடித்துவிடலாம் என்றும் போலீஸார் உறுதி அளித்ததாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிகிறது. இதையடுத்து, இருதரப்பு சம்மதத்தின்பேரில், பொதுநபர்கள் மூலம் வீடு அளக்கப்பட்டு, பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், FIR பதிந்து 5 நாள்களுக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்டுள்ள தம்பியின் மனைவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் பற்றி லாஸ்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர். ஆனால், போலீஸார் FIR பதிந்ததுதான் தற்கொலைக்குக் காரணம் என பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டுவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாரை அவர் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, “உரிய விசாரணை நடத்தி, தம்பி தரப்பில் தவறு இருப்பது உறுதியானதால்தான், மூவர் மீதும் லாஸ்பேட்டை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர். அண்ணன் தம்பி இடத்தகராறு என்பதால், அவர்களை கைது செய்யவோ, மேல் நடவடிக்கைக்கோ போலீஸார் ஆர்வம் காட்டவில்லை. FIR பதிவு செய்யப்பட்ட பிறகு, பொதுநபர்கள் மூலம் இடப் பிரச்சனைக்கு தீர்வும் காணப்பட்ட நிலையில், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கு போலீஸார் எப்படி காரணமாக முடியும்? போலீஸ் FIR பதிவு செய்ததால்தான் அந்தப் பெண் இறந்தார் என பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டுவதாக தெரிகிறது. அப்படியானால், காவல்நிலையங்களில் புகாரை பெற்றுக்கொண்டு எந்த மேல்நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதுதான் சரி என்று அவர் கூறுகிறாரா? நடவடிக்கை எடுக்கவிடாமல் போலீஸாரை அச்சுறுத்துவது போலத்தான் எம்.எல்.ஏ.வின் பேச்சு உள்ளது.
இது லாஸ்பேட்டை காவல்நிலையத்தோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. இந்தச் செய்தி பரவும்போது, மற்ற காவல்நிலையங்களிலும் FIR பதிய போலீஸார் தயக்கம் காட்டுவார்கள். அதையும் மீறி போலீஸார் FIR பதிய முயற்சிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்வதாக மிரட்டினால், என்ன செய்ய முடியும்? இது சட்டம் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற விவகாரங்களை எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தற்கொலை எண்ணம் ஏற்படுவோர், SNEHA தற்கொலை தடுப்பு மையம் – 044 2464000, மாநில தற்கொலைத் தடுப்பு மையம் – 104ஐ தொடர்பு கொள்ளவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry