இனி பாடப்புத்தகங்களிலும் ‘ஒன்றிய அரசு’ என்றே இடம்பெறும்! மத்திய அரசு என்ற வார்த்தை நீக்கப்படும் என லியோனி அறிவிப்பு!

0
8

இனி பாடப் புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம்  செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையையே அமைச்சர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 90% ஊடகங்களும் ஒன்றிய அரசு என்ற பதத்தையே பயன்படுத்துகின்றன. இந்த சொல்லாடலுக்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார். ஆனாலும், இந்த ஒன்றிய அரசு பதத்துக்கு, ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்ளைச் சந்தித்த அவர், 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசின் பள்ளி பாடப் புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்ற வார்த்தையே இடம் பெறும் என தெரிவித்தார். மேலும்  பாடங்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடப் புத்தங்கள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமனம் செய்துள்ளதற்கு பரவலாகவே எதிர்ப்பு காணப்படுகிறது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த திண்டுக்கல் லியோனி, பண்ணைகளில் ஃபாரின் மாடுகளில் மெஷின் மூலம் பால் கறப்பதாகவும், இதனை குடிப்பதால் தான், பெண்களின் இடுப்பு பேரல் போல ஆகிவிட்டதாகவும் நக்கலடித்தார். இவரது இந்த ஆபாச பேச்சுக்கு அப்போது பரவலாக எதிர்ப்பு எழுந்தது.

இதைப்போன்று பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை பாடநூல் கழகத் தலைவர் பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. விமர்சித்துள்ளார். “தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம், சபாஷ், இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா?” என நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry