கர்ப்பிணிகளே உஷார்! கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று! தமிழகத்தில் கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

0
16

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜிகா வைரஸ்(Zika Virus) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணிகள் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம், திருவனந்தபுரம் மாவட்டம் செறுவார கோணம் பகுதியை சேர்ந்த  24 வயதான கர்ப்பணிக்கு, காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டன.  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண்ணுக்கு,  கடந்த 7ஆம் தேதி குழந்தை பிறந்தது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுஅதைத் தொடர்ந்து மேலும் சிலரை பரிசோதித்ததில், மேலும் 14 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஏடிஸ் கொசுக்கள் மூலம் (Aedes species mosquito) பரவும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டால், காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். இதே ஏடிஸ் கொசுக்கள்தான் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலையும் ஏற்படுத்துகிறது. ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7-வது நாளில் அறிகுறிகள் காணப்படும்

இதுகுறித்து பொதுச் சுகாதார வல்லுனர் டாக்டர் குழந்தைசாமியிடம் வேல்ஸ் மீடியா சார்பில் கேட்டபோது, “ஜிகா வைரஸ் தொற்றை சாதாரணமாக கையாளக்கூடாது. ஜிகா வைரஸால் ஏற்படும் காய்ச்சல் சாதாரண நபர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, மரணம் சம்பவிக்காது என்றாலும், வருங்கால சந்ததியை பாதிக்கும்.  எப்படி என்றால், கர்ப்பிணிகளை பொறுத்தவரை ரூபெல்லா தொற்றும், ஜிகா தொற்றும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும். கருத்தரித்து, முதல் 16 வாரங்களுக்குள் இந்த வைரஸ் பாதித்தால், பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்கக்கூடும். எனவே இது டெங்குவை விட மோசம் என்றே கூற வேண்டும்.

பயன்படுத்தாமல் இருக்கும் டயர், சாலைகளில் வீசப்படும் தேங்காய் ஓடு பிளாஸ்டிக் டப்பா, பெயின்ட் டப்பா, தண்ணீர் தொட்டி, தண்ணீர் டிரம், வீடுகளில்  தண்ணீர் சேமிக்கும் சம்ப், பயன்படுத்தத் தகுதியில்லாத வாகனங்கள் போன்றவற்றில் தேங்கும் நன்னீரில் இருந்துதான் ஜிகா வைரஸை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவும் உற்பத்தியாகிறது. சம்ப், தண்ணீர் தொட்டி, டிரம் போன்றவற்றை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிலுள்ள வேண்டாத பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

ஜிகா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால நடவடிக்கை எடுப்பது அவசியம். அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்ததால்தான் ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க முடியும். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதேவேளையில், காய்ச்சல் பரிசோதனை வசதியை அதிகப்படுத்த வேண்டும். அரசு ஆய்வகங்களில் உள்ள RT-PCR கருவி மூலமாகவே, வைரஸ் காய்ச்சல் பரிசோதனையையும் செய்ய முடியும். அதற்கான உபகரணங்களை அரசு கொள்முதல் செய்து தர வேண்டும். ஜிகா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கருதி, போதிய கவனம் செலுத்தாமல் இருந்துவிடக்கூடாது என்பதே அரசுக்கு வைக்கும் கோரிக்கைஎன்று டாக்டர் குழந்தைசாமி தெரிவித்தார்

இதனிடையே, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்றினால், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், தொற்று ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டாலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கான சிகிச்சை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கர்ப்பணிப் பெண்கள், குழந்தைகள், வயதுக்கு வரும் நிலையில் இருக்கும் பெண் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து  காக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry