கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா! சர்ச்சுகளுக்கு எதிராகக் கொந்தளிப்பு! ஹிந்து மத சடங்குகளில் நம்பிக்கை! கார்த்தி சிதம்பரம் அதிரடி!

0
14

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கட்சித் தலைமையை இடித்துரைக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அரசு நிர்வாகங்களில் சர்ச்சுகளின் தலையீடு இருப்பதாகக் கருதும் அவர், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இணைய இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், “நான் கோயில்களுக்குச் செல்வதுண்டு, ஜோதிடம், சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவன்.

தனிப்பட்ட நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எனது அரசியல் இருக்காது.  கட்சியில் சிலர் இந்துத்துவாவை பரிந்துரைக்கிறார்கள், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சில விஷயங்களில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அரசு நிர்வாகங்களில் சர்ச்சுகளின் தலையீடு இருப்பதுபோலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். போதுமான அளவுக்கு கோயில்கள், குருத்வாராக்கள், மசூதிகள் உள்ளன, நமது பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் என்பதை முழு நேரப்பணியாக கருத வேண்டும். வேட்பாளர்கள் தேர்வு, மனுதாக்கல் செய்வது, தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்து பிரச்சாரம் செய்வது, தேர்தல் பணி அல்ல. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.  மக்கள் மனநிலையை அறிந்து, தொடர்ந்து செய்ய வேண்டிய வேலை அது. பாஜக செய்வது போல, கட்சியின் திட்டங்களை, செயல்பாடுகளை மக்களை பேச வைக்க வேண்டும். நான் ஏற்காத ஒன்றாக இருந்தாலும், பாஜகவுக்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது. கட்டாயப்படுத்தியாவது அந்த சித்தாந்தத்தை, மக்கள் பேசும்படி செய்கிறார்கள், அது வெற்றியை கொடுக்கிறது.

எனவே, காங்கிரஸுக்கான திட்டங்களை தெளிவாக வகுத்து, அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் 100 இடங்களுக்கும் குறைவாகவே வென்றிருக்கிறது. எனவே கட்சி மீதான தனது அதிருப்தியை கபில் சிபல் வெளிப்படையாகத் தெரிவித்ததில் தவறில்லை. தவறுகளை கண்டறிந்து சரிசெய்ய வேண்டிய தருணம் இது.

கமல்நாத்(மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்), DK சிவக்குமார்(கர்நாடக காங்கிரஸ் தலைவர், முன்னாள் மாநில அமைச்சர்) ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். மூத்த தலைவரான கமல்நாத், தேர்தல் அரசியலில் சிறந்த அனுபவசாலி, வெற்றிக்கான வழியை அவரால் அடையாளம் காண முடியும். DK சிவக்குமார், தேர்தல் அரசியலில் பல விதங்களில் தனது திறமையை நிரூபித்துக் காட்டியவர். இவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

ஹெச். வசந்தகுமார் காலமானதால் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும்.

இதனால், அந்தத் தொகுதியில் வெற்றி உறுதியாகும் அதே நேரத்தில், பிரியங்கா நாடாளுமன்றம் செல்வது, கட்சியினருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். கட்சித் தலைமை பதவிக்கு தேர்தல் வைக்கத் தேவையில்லை, அதானல் பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. தேர்தல் வைத்தாலும், ராகுல் காந்திதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்.” என்று கார்த்தி சிதம்பரம் பேட்டியில் கூறியுள்ளார்.

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry