பள்ளி மாணவி மர்ம மரணம்! 2 மணி நேரத்தில் திரண்ட 8000 பேர்! பெரும் வன்முறை!

0
698

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவியின் மர்ம மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த சூழலில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு மாணவ அமைப்பினர், பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தப் பள்ளியில் ஏற்கனவே 5 மாணவிகள், ஒரு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தாக புகார் உள்ளது. இதன் தொடர்ச்சியாக +2 மாணவி ஸ்ரீமதியும் மர்மமான முறையில் உயிரிழக்கவே, இதற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்கக்கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், அரசியல் சார்ந்த மாணவர் அமைப்பினர் என சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 2 மணி நேரத்தில் அங்கு திரண்டனர்.

போலீஸார் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்காததால், குறைந்த அளவே அங்கு வந்திருந்தனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

ஆனால் இதற்கும் அடங்காத போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததுடன், திரளாக பள்ளிக்குள் நுழைந்தனர். வகுப்பறைகள், கண்ணாடி ஜன்னல்கள், கணினி மற்றும் லேப்டாப்களை சூறையாடிய அவர்கள், பள்ளி பேருந்துகளையும் தீக்கிரையாக்கினர். மாணவர் அமைப்பினரின் தாக்குதலில் டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 20 போலீஸார் காயமடைந்ததனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கடலூரிலிருந்து 150 போலீஸார் விரைந்துள்ளனர்.

அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொருள்களைச் சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. காவலர்களை தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட வன்முறை போலவே தெரிகிறது. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் டிஜிபி தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டதாகவும், போராட்டத்துக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது எப்படி என்பது குறித்து உளவுத்துறை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், “ஸ்ரீமதிக்கு நீதி கேட்டுப் போராட்டம்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்று நேற்று (ஜூலை 16) தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அதில் இணைந்துள்ளனர். இந்த போராட்டத்துக்கான அழைப்பு இந்த குழுவின் மூலம் பகிரப்பட்டுள்ளது என்று உளவுத்துறை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry