கஞ்சா விற்பதில் தகராறு! எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கைது!

0
435

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகச் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் அக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை, காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதை நிர்வாகம் மூடிமறைப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மாலை, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மாணவர்களுக்குள் நடைபெற்ற அடிதடியில் இருதரப்பினரின் ஆதரவு மாணவர்களும் அங்கு குவிந்தனர். அப்போது கற்களை வீசி நடைபெற்ற தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீஸார் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையினரின் விசாரணையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கஞ்சா, போதைப் பொருட்கள் அவற்றைப் பயன்படுத்த உதவும் கருவிகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, செங்கல்பட்டு சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

மாணவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்துகொள்வதை கண்டுபிடித்து அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளாததால், மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனதுடன், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry