மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம்! பாரம்பரியத்தை காக்குமா தமிழக அரசு?

0
373

மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் செய்தலாகும். ஆனால் உலோக பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே காணக்கூடிய அரியதொரு பொருளாக மண்பாண்டங்கள் மாறிவிட்டன.

தற்போது பயன்பாட்டில் உள்ள மண்பாண்டத் தொழில்நுட்பமும் இன்னும் 20 ஆண்டுகளில் மறைந்துவிடும் அபாயத்தில்தான் உள்ளது. இத்தொழிலை கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி இல்லாததே இதற்குக் காரணமாகும். அதாவது மனித நாகரீகத்தின் ஆதித் தொழிலாக இருந்த மண்பாண்டம் இன்று அந்திம காலத்தில் உள்ளது. மண்பாண்டங்களை கையால் தொடும் கடைசி தலைமுறை அனேகமாக நாமாகக்கூட இருக்கலாம்.

இந்தத் தொழிலை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து வேலூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ம. லோகேஷிடம் கேட்டபோது, “மிகச் சிலரது கவனம் இப்போது பாரம்பரியத்தின் மீது திரும்பியிருக்கிறது. அதனால் சிலர் மண்பாண்டங்களை வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் உபயோகிக்கிறார்களா? என்பது தெரியவில்லை. மண்பாண்டத் தொழிலை மீட்க வேண்டும் என்றால், இத்தொழிலுக்கென பிரத்யேகமாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

ம. லோகேஷ்

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் ம.லோகேஷ் வரிசைப்படுத்தினார். “புதிதாக மண்பாண்டம் செய்ய கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு “மண்பாண்டத் தொழிலுக்கான இலவச பயிற்சி பள்ளி”, போதிய இடம் இல்லாமல் அவதிப்படும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ‘பொதுக் களம்’, கைகளால் சுற்றப்பட்ட சக்கரங்கள், தற்போது மின் மோட்டார் மூலம் சுற்றப்படுகின்றன. இந்த தொழிலுக்கென அதைத்தாண்டி புதிய இயந்திரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டபத்தில், 3D தொழில்நுட்பம் உள்ள  பிரத்யேக புதிய கருவிகளை உருவாக்க ஆய்வுக் கூடம், களிமண்ணின் தரமறியவும் – தரமேற்றவும் சோதனைக் கூடம், மண்பாண்ட விற்பனைக்கான சந்தை, மண்பாண்ட சமையலுக்கான மாதிரி சமையல் கூடம், மக்களின் கவனத்தை ஈர்க்க 15 அடி உயர கின்னஸ் பானை போன்ற இவையனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கினால், இதுவே மண்பாண்டத் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட “உலகின் முதல் சிறப்புப் பொருளாத மண்டலம்” ஆக இருக்கும். இந்தப் பெருமையும் தமிழக அரசுக்குக் கிடைக்கும்.

மண்பாண்ட தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது ஒரு மரபுத் தொழிலை மீட்டெடுக்கும் முயற்சி மட்டுமல்ல, இம்மண்ணுக்கு சொந்தமான ஓர் வாழ்வியலை மீட்டெடுக்கும் புரட்சியாகும்”. இவ்வாறு லோகேஷ் கூறினார்.

மண்பாண்டம் போன்ற மரபு சார்ந்த தொழில்கள் இன்னமும் ஒரு சாதிய அடிப்படையிலான தொழிலாகவே கருதப்படுகிறது. குறிப்பாக மண்பாண்ட தொழிலை குயவர்கள் அல்லது குலாலர்கள் என்ற சாதியினரே செய்து வருகின்றனர். மண்பாண்டத் தொழிலை மற்ற சாதியினர் கற்பதில் மனத் தடை உள்ளது.

மக்களின் இந்த மனோபாவம் காரணமாக சாதியக் கட்டமைப்புக்குள் சிக்கியதால்தான் மண்பாண்ட தொழில் அழிவின் விளிம்பில் இருக்கிறது. சாதியக் கட்டமைப்பில் இருந்து விடுபட்டு நிறுவன மயமாக்கப்பட்டத் தொழிலாக மாறினால் மட்டுமே, மண்பாண்டத் தொழில் இலாபகரமான தொழிலாக மாறுவதுடன், வளர்ச்சியும் அடையும்.

எடுத்துக்காட்டாக, செருப்புத் தைக்கும் தொழிலாளி என்றால், சாலையோரம் கறுப்புக் குடையில் அமர்ந்திருக்கும் நபர் நம் மனக் கண் முன் வருவார். ஆனால், Bata, Adidas, Reebok, Skechers, VKC எனப் பல நிறுவனங்கள் ஏ.சி. வசதி கொண்ட ஷோரூம்களில் காலணிகளை விற்கிறார்கள். இந்த நிறுவனத்தில் பணிபுரியம் அனைவரும் செருப்புத் தைக்கும் தொழில் செய்யும் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்களா? என்றால் இல்லை. காலணித் தொழில் நிறுவனமயமானதே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.  காலணித் தயாரிப்புத் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதிய கட்டமைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

இந்த சாதியக் கட்டமைப்பை உடைத்த தொழில்களாக சிலவற்றை நாம் வகைப்படுத்தலாம். தச்சுத் தொழில் – இன்டீரியர் டிசைன் என மாறியுள்ளது. கொத்தனார் தொழில் – ஆர்க்கிடெக்ட் தொழிலாக மாறியுள்ளது. முடிதிருத்தும் தொழில் – பியூட்டிஷியன் என மாறியுள்ளது. இந்தத் தொழில்களில் சாதிய கட்டமைப்பே இல்லை. சம்பந்தப்பட்ட படிப்பை படித்த யாரும் அந்தத் தொழிலை திறம்படச் செய்யலாம், செய்தும் வருகிறார்கள்.

இதேபோன்று மண்பாண்டத் தொழிலை கற்பித்தலுக்கான தளத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. மந்திரக்குடுவை, அதிசய விளக்கு, மாயக் கண்ணன் சிலை (கிண்ணத்தில் நிரப்பப்படும் தண்ணீர் கண்ணனின் கால்பட்டதும் வெளியேறிவிடும்) போன்ற நுணுக்கமான மண்பாண்டத் தொழில் 30 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது.

தொழில் தெரிந்த மண்பாண்டத் தொழிலாளர்களும் போதிய இடவசதியின்றி இந்தத் தொழிலைவிட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் மீண்டும் தொழில் செய்யவும், தொழிலை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்கவும் ம. லோகேஷ் சொல்வது போல மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் சரியாக களமாக இருக்கும்.

இதன் மூலம் மண்பாண்டத் தொழில் குறிப்பிட்ட சாதியினருக்கானது என்பது மறைந்து, அனைவரும் தொழில் நோக்கில் பயிற்சி பெற்று சம்பாதிக்க முடியும். மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதுடன், பல ஆயிரம் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பும் கிடைக்கும். தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry